அப்பா ஆம்புலன்ஸ் தேடிப்போனார்.. 2 வயது தம்பியின் உடலை மடியில் ஏந்தி அமர்ந்திருந்த சிறுவன்!
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா நகரில் பத்திரிகையாளர் எடுத்த புகைப்படம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா நகரில் பத்திரிகையாளர் எடுத்த புகைப்படம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. அதில், 8 வயது சிறுவன் குல்ஷன் தனது 2 வயது சகோதரன் ராஜாவின் உடலுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர்களின் தந்தை பூஜாராம் ஜாதவ் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனத்திற்காக அலைந்து திரகிறார். இவை அனைத்து புகைப்படத்தில் பதிவாகி உள்ளது.
அம்பாவின் பட்ஃப்ரா கிராமத்தில் வசிப்பவர் பூஜாராம். தனது 2 வயது மகனை போபாலுக்கு வடக்கே 450 கிமீ தொலைவில் உள்ள மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் உள்ளூர் மருத்துவமனையின் பரிந்துரைக்கு பிறகு அழைத்து சென்றுள்ளார்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பூஜாராமின் இரண்டு வயது மகன் ராஜாவுக்கு வயிற்றில் நீர் கோர்த்துள்ளது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட ராஜா சிகிச்சையின் போது இறந்தார். இச்சூழலில், அவர்களை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஏற்கனவே சென்று விட்டது.
போதிய வசதி இல்லாத பூஜாராம், உடலை 30 கிமீ தொலைவில் உள்ள தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வாகனம் வேண்டும் என்று மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மருத்துவமனையில் வாகனம் இல்லை என்றும் வெளியில் உள்ள வாகனத்தில் செல்ல வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என்றும் பூஜாராம் கூறுகிறார்.
மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் 1,500 ரூபாய் கேட்டதாகவும் கூறிகிறார் பூஜாராம். நான்கு குழந்தைகளின் தந்தையான பூஜாராமால் அந்த பணத்தை புரட்ட முடியவில்லை.
ஆதரவற்ற பூஜாராம் தனது மகன் ராஜாவின் உடலை எடுத்து கொண்டு குல்ஷனுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். ஆனால், அவரால் எந்த வாகனத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.அப்போது தான், குல்ஷனை மொரீனாவின் நேரு பூங்காவிற்கு முன்னால் விட்டு விட்டு வேறு வாகனத்தை தேடி கண்டுபிடிக்க பூஜாராம் சென்றார். அரை மணி நேரமாக, குல்ஷன் அங்கேயே அமர்ந்திருந்தார். இறந்த சகோதரனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு, தன் தந்தை திரும்பி வருவாரா என பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்களில் கண்ணீரோடு குல்ஷன் உடலைத் தழுவியபடி ஈக்களை விரட்டும் காட்சி அங்கிருப்பவர்களை உலுக்கியது. பின்னர், அங்கிருப்பவர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இறுதியாக, காவல்துறை அலுவலர் யோகேந்திர சிங் உடலை எடுத்துக்கொண்டு, குல்ஷனை மீண்டும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பூஜாராம் மற்றும் அவரது மகன்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்