மனைவி வேறு ஒருவரை காதலித்தால் தகாத உறவு கிடையாது: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தகாத உறவு என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்

மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தகாத உறவு கிடையாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு மனைவி தனது கணவனைத் தவிர வேறு ஒருவரை நேசிப்பதும், அவருடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடாதவரை, அது தகாத உறவாக கருதப்படாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"தகாத உறவு என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா தீர்ப்பளித்தார். அதே நேரத்தில், மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற கணவரின் வாதத்தை நிராகரித்தார்.
குடும்ப நீதிமன்றத்தின் இடைக்கால ஜீவனாம்சம் ரூ.4,000 வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
"ஒரு மனைவிக்கு உடல் ரீதியான உறவு இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் இருந்தாலும், அந்த மனைவி தகாத உறவில் வாழ்கிறார் என்று கூறுவதற்கு அது மட்டும் போதுமானதாக இருக்காது" என்று நீதிமன்றம் கூறியது.