Unemployment CMIE Data: வேலையில்லா நிலை.. ஹரியானாவுக்கு முதலிடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?
ஹரியானா மாநிலம் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் 37.3% பேர் வேலையின்றி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலங்களில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது மற்றும் எந்தெந்த மாநிலங்கள் குறைவாக உள்ளன என்று இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அந்த தரவுகளின்படி, ஹரியானா மாநிலம் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் 37.3% பேர் வேலையின்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் 32.8 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் மாநிலம் 31.4 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஜார்கண்ட் மாநிலம் 17.3 சதவிகிதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே சத்தீஸ்கர் மாநிலம் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் வெறும் 0.4% பேர் மட்டுமே வேலையின்றி உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேகாலயா மற்றும் மகாராஷ்டிராவில் முறையே 2% மற்றும் 2.2% வேலையின்மை விகிதம் கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த அறிக்கை, தமிழ்நாடு 7.2 சதவிகிதம் பேர் வேலையின்மையுடன் இருப்பதாக தெரிவிக்கிறது.
தேசிய புள்ளியியல் நிறுவனம் நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் குறித்து புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டள்ளது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டிற்கான ஏப்ரல் – ஜூன் மாத காலத்தில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 20.8 சதவீதமாக பதிவாகியிருந்தது.
ஏப்ரல் – ஜூன் 2021 காலகட்டத்தில் நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் 12.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2020 காலகட்டத்தில் கொரோனா பரவல் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக நாடு முழுவதும் முடக்க நிலையில் இருந்தது. 2021ம் ஆண்டு ஏப்ரல் – ஜூன் மாத காலகட்டத்தில் நகர்ப்புறத்தில் 9.3 சதவீதம் நபர்கள் வேலையில்லாமல் இருந்ததாக பதிவாகியுள்ளது.
நகர்ப்புறங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத பெண்கள் ஏப்ரல் – ஜூன் 2021 காலகட்டத்தில் 14.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 21.1 சதவீதமாக பதிவாகியிருந்தது. ஆண்களின் எண்ணிக்கை ஏப்ரல் – ஜூன் 2021 காலகட்டத்தில் 12.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஊரடஙகு பிறப்பிக்கப்பட்ட 2020 காலகட்டத்தில் இதே மாதங்களில் 20.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் ஜனவரி – மார்ச் மாதத்தில் இது 8.6 சதவீதமாக பதிவாகியிருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து இரண்டரை மாத காலம் ஊரடங்கு அமலில் இருந்ததாலும், நாடு முழுவதும் அனைத்து சேவைகளும், தொழிற்சாலைகளும் முடங்கியதாலும் கோடிக்கணக்கானோர் திடீரென வேலையிழந்தனர். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.