முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
கொல்கத்தா மருத்துவர் வழக்கால் மேற்குவங்க அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மேற்வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனக்கு பதவி முக்கியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மம்தா அரசுக்கு நெருக்கடி:
மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கம் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மேற்குவங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
RG Kar Medical College and Hospital rape-murder case | West Bengal CM Mamata Banerjee says "I am ready to resign from the Chief Minister of West Bengal. I am not concerned about the post. I want justice, I am only concerned about justice getting served." pic.twitter.com/tPoZnTVU3z
— ANI (@ANI) September 12, 2024
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதி கிடைப்பதற்காக தான் பதவி விலகக் கூட தயார் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மேற்குவங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். பதவியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு நீதி வேண்டும். நீதி வழங்கப்படுவதைப் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன்" என்றார்.
வழக்கின் பின்னணி: இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே சம்பவம் நடந்த கல்லூரியின் முதல்வரான சந்தீப் கோஷ் மீது சந்தேக கண்கள் பாய்ந்து வருகிறது. குறிப்பாக, இந்த சம்பவம் பெரிய பிரச்னையாக வெடித்த உடனேயே தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களிடம் தவறான தகவல்களை அளித்தது சந்தீப் கோஷ் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது.
மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்தீப் கோஷ்,வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சந்தீப் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.