Uttarpradesh: விருந்து நிகழ்ச்சிகளில் பாம்பு விஷம் சப்ளை...சிக்கலில் பிக்பாஸ் பிரபலம்...நடந்தது என்ன?
இந்தியில் ஓடிடி தளங்களில் வெளியான பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Crime: இந்தியில் ஓடிடி தளங்களில் வெளியான பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாம்பு விஷம் சப்ளை:
பிக்பாஸ் தமிழுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் ஏராளமோ, அதேபோல தான் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மவுசு அதிகம். பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் என பிரித்து கூறும் அளவுக்கு அவர்களை மக்களிடையே பிரபலப்படுத்துவது இந்த நிகழ்ச்சி தான். இப்படி பிரபலமான இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஒருவர் தற்போது போலீஸ் வளைக்குள் சிக்கியுள்ளார். அதாவது, இந்தியில் ஓடிடி தளங்களில் வெளியான பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளரும், பிரபல யூடியூபருமான எல்விஷ் யாதவ் மீது, பார்ட்டியில் பாம்பு விஷத்தை சப்ளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பண்ணை வீடுகளில் நடைபெறும் பார்ட்டியில் பாம்பு விஷங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதில், பண்ணை வீடுகளில் நடைபெறும் பார்ட்டியில் பாம்புகள் துன்புறுத்தப்பட்டு வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதாகவும், பார்ட்டியில் பங்குபெறும் நபர்களுக்கு தடை செய்யப்பட்ட பாம்பு விஷங்கள் சப்ளை செய்யப்படுவதாகவும் வனத்துறை அலுவலர்களுக்கு People for Animal (PFA) அமைப்பின் விலங்குகள் நல அதிகாரி கௌரவு குப்தா புகார் கொடுத்தார்.
அதன்பேரில், நொய்டா வனத்துறை காவலர்களும், பிஎஃப்ஏ தன்னார்வு தொண்டு நிறுனத்தினரும் இணைந்து பார்ட்டி நடைபெறும் இடத்தில் சோதனை செய்தனர். சோதனையில் பார்ட்டியில் இருந்து ஐந்து நாகப் பாம்புகள், இரட்டை தலை பாம்புகள், ஒரு சிவப்பு நிற பாம்பு, ஒரு மலைப்பாம்பு என ஒன்பது பாம்புகளும், 25 மில்லி தடை செய்யப்பட்டட பாம்பு விஷத்தையும் வனத்துறை பறிமுதல் செய்தது.
போலீஸ் வளைக்குள் பிக்பாஸ் பிரபலம்:
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்காக வீடியோ எடுக்க பாம்புகள் பயன்படுத்தப்பட்டதையும், பாம்பு விஷம் அதிக விலைக்கு விற்கப்பட்டதையும் கைதானவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருடன் யூடியூபரும், பிக்பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் பெயர் அடிப்பட்டது. இதற்கு முன்பு, பாம்புகளுடன் எல்விஷ் யாதவ் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், எல்விஷ் யாதவ் உட்பட 6 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் 9,39,40,50,51 மற்றும் ஐபிசி பிரிவு 120 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று எல்விஸ் யாதவ் கைதானர். கோட்டா நகரில் எல்விஷ் யாதவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன் அவை போலியானவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என குறிப்பிட்டார். பின்னர், கைதான எல்விஷ் யாதவை விசாரணைக்கு பின்னர் நொய்டா போலீசார் விடுவித்ததாக தெரிகிறது.