Uttarpradesh : உத்தரபிரதேச அரசுக்கு ரூபாய் 120 கோடி அபராதம்..! ஏன் தெரியுமா..?
நீர்நிலைகள் மாசுபாட்டைத் தடுக்கத் தவறியதற்காக உத்தரபிரதேச அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூபாய் 120 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அமைந்துள்ளது கோரக்பூர். இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து, பசுமை தீர்ப்பாயத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக கடந்த மாதம் 30-ந் தேதியுடன் விசாரணை நிறைவு பெற்றது. உத்தரபிரதேசத்தில் நீர் மாசுபடுதலை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் மிக கடுமையாக தோல்வியைச் சந்தித்திருப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, நீர்நிலைகள் மாசுபடுதலை கட்டுப்படுத்த தவறிய உத்தரபிரதேச அரசுக்கு ரூபாய் 120 கோடியை பசுமைத் தீர்ப்பாயம் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. திடக்கழிவுகளை பதப்படுத்த தவறியதற்காகவும், கழிவுநீர்களை ஆறுகளில் வெளியேற்றியதற்கும் உத்தரபிரதேச அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
ஒருநாளுக்கு ஒரு மில்லியன் லிட்டர் கழிவுநீரை ஆறுகளில் கலக்கவிட்டதற்கு ரூபாய் 2 கோடி வீதம் ரூபாய் 110 கோடி வரை அபராதமாக உத்தரபிரதேச அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி திடக்கழிவுகளை பதப்படுத்த தவறியதற்காக ரூபாய் 10 கோடி என மொத்தம் ரூபாய் 120 கோடியை பசுமைத் தீர்ப்பாயம் அபராதமாக விதித்துள்ளது.
நீதிபதி சுதிர் அகர்வால் தலைமையிலான அமர்வு, அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், எந்தெந்த தொழிற்சாலைகளுக்கு பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், உயிரி சீரமைப்பு பணிகளுக்கு பிறகு நீரின் தரம் நேர்மறையான முடிவுகளை காட்டவில்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும், பசுமைத் தீர்ப்பாயம் அபராதமாக விதித்துள்ள ரூபாய் 120 கோடியை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் கூட்டாக பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை இயக்குவது, பயன்படுத்துவது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வது குறித்து விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டனர்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு மீது ஏற்கனவே அதிருப்தி நிலவி வரும் நிலையில், பசுமைத் தீர்ப்பாயம் 120 கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Salman Khan : சல்மான்கானை கொல்ல பிளான் 'B'.. ஒரு மாதம் நோட்டமிட்டு பண்ணை வீட்டுக்கு அருகே தங்கிய கும்பல்.. ஷாக் தகவல்
மேலும் படிக்க : Oxfam : இவர்களெல்லாம் இவ்வளவு குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.. ஆக்ஸ்ஃபாம் அளிக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்..