ட்ராயின் அதிரடி ஆக்ஷன்.. நிம்மதி பெருமூச்சுவிடும் வாடிக்கையாளர்கள்.. சூப்பர் அறிவிப்பு இதோ..
"டிராய் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் ஸ்பேம் அழைப்புகள் குறையும் என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்"
பிசியான காலகட்டங்களில் ஒவ்வொரு நாளையும் நகர்த்தும் மக்களுக்கு நாள் முழுவதும் தொந்தரவு தரும் அழைப்புகளாக ஸ்பேம் உள்ளது. இந்த அழைப்புகளால் வாடிக்கையாளர்கள் மிகவும் சோர்வடைந்து போவதாகவே கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொல்லைதரும் அழைப்புகள் அப்படியே உள்ளது.
கோடிக்கணக்கானோர் செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் இது போன்ற தேவையற்ற அழைப்புகள் அதிகரித்து இருப்பதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்த விசயத்தில் தற்போது இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
டிராயின் அதிரடி நடவடிக்கை:
இது தொடர்பாக தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான உத்தரவுகளை தொலைதொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட அல்லது கணினியால் உருவாக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத அனுப்புனர்கள் அல்லது வணிக அழைப்பாளர்களிடமிருந்து வரும் விளம்பர நோக்கத்துடனான அழைப்புகளை அனைத்து தொலைதொடர்ப்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்யப்படாத அனுப்புனர்கள் அல்லது பதிவு செய்யப்படாத வணிக அழைப்பாளர்கள் யாரேனும் வர்த்தக தொலைபேசி அழைப்புகளை உருவாக்கி, விதிமீறல்களில் ஈடுபடுவது தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
உத்தரவை மீறிய புகார் மீதான நடவடிக்கைகள்:
* உத்தரவை மீறி வாடிக்கையாளர் புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த அனுப்புனரின் அனைத்து தொலைதொடர்பு வினியோகங்களையும் 2 ஆண்டுகளுக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும்.
* அந்த அனுப்புனர்கள் 2 ஆண்டுகளுக்கு கருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.
* கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அனுப்புனரின் அனைத்து விவரங்களையும், பிற தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு பகிரப்பட வேண்டும்.
* அதன்பின் அவர்களுக்கு வழங்கிய அனைத்து தொலைதொடர்புக்கான வி நியோகங்களையும் அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் நிறுத்தி விடுவார்கள்.
* அந்த அனுப்புனருக்கு புதிய தொலைதொடர்ப்புக்கான விநியோகங்கள் எதனையும் எந்தவொரு தொலை தொடர்பு சேவை நிறுவனங்களும் ஒதுக்கக்கூடாது.
* இந்த உத்தரவுகளை அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.
* ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16 வது நாளில் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை பற்றி தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டிராய் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளால் தினமும் கிரிடிட் கார்டு வேண்டுமா? இன்சூரன்ஸ் வாங்குங்க என்று பல்வேறு தொல்லை தரும் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. மேலும் இது போன்ற தேவையற்ற அழைப்புகளால் சில நேரங்களில் முக்கியமான அழைப்புகளையும் எடுக்க முடியாத சூழலில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு 12 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் டிராய்க்கு வந்ததாக தெரிகிறது.
மேலும் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் 7 லட்சத்து 90 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டிருக்கிறது. இனி இது போன்ற தேவையற்ற அழைப்புகள் வராத வண்ணம் டிராய் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் ஸ்பேம் அழைப்புகள் குறையும் என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.