திருவிதாங்கூர் தேவசம் போர்டின் (TDB) புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட கே. ஜெயக்குமார், சனிக்கிழமை இன்று தனது தலைமையிலான நிர்வாகக்குழு பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் தக்கவைக்கவும் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக கே. ஜெயக்குமார் இன்று பதவி ஏற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவசம்போர்டு தலைவராக இருப்பார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் செயல்பாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், அதுவே முன்னோக்கிச் செல்வதற்கான தனது தனிப்பட்ட பலம் என்றும் கூறினார். சபரிமலை கோவயில் தங்கம் மாயமானது குறித்து கேள்விக்கு, கே. ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது கூறியதாவது, நம்பிக்கை குறைவு இருப்பது உண்மைதான். ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பக்தர்களின் மனதில் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், பக்தர்களின் இந்த நம்பிக்கை எவ்வாறு மீறப்பட்டது? ஏனென்றால் அங்கு சில விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கின்றன. வாரியத்தை வழி நடத்தும் நிர்வாகக்குழு, அங்கு இதுபோன்ற எதையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். சபரிமலை கோவில் நிர்வாகத்தை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றுவதே தனது விருப்பம். நவம்பர் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலம்- மகரவிளக்கு பூஜை தொடங்குகிறது. நாளை கோவிலுக்குச் சென்று இது தொடர்பாக மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறேன்.
பக்தர்களுக்கு சரியான மற்றும் பொருத்தமான விஷயங்களைச் செய்து அவர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத விஷயங்களை ஒழுங்குபடுத்த வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் வாரியத்தின் செயல்பாட்டை மேலும் தொழில் முறைமயமாக்குவதற்கு பாடுபடுவேன். ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன். பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் நேர்மையற்ற மக்களை விரட்டியடித்து பக்தர்களின் குறைகளை தீர்ப்போம். சபரிமலை சீசன் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். சர்ச்சைகள் எங்கள் கவனம் அல்ல. அரசாங்கத்தின் நம்பிக்கையை நான் நிலைநிறுத்துவேன் என்றார்.





















