Tirumala Tirupati: பக்தர்களே! வரும் 19-ம் தேதி 4 மணி நேரம் தரிசனம் ரத்து - காரணம் இதுதான்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு டிசம்பர் 19ல் நான்கு மணி நேரம் தரிசனம் ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு டிசம்பர் 19ல் நான்கு மணி நேரம் தரிசனம் ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில்:
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி:
அந்த வகையில், மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலகலமாக நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படும்.
இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் சொர்க்கவாசல் ஜனவரி 1 வரை திறந்திருக்கும். இதற்கான சொர்க்க வாசல் தரிசன ஏற்பாட்டையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
ஆழ்வார் திருமஞ்சனம்:
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறைய ஆழ்வார் திருமஞ்சனம் என சொல்லப்படும் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு நடத்தப்படுகிறது. கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் டிசம்பர் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நான்கு மணி சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இந்த நான்கு மணி நேரமும் ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிளி வரை உள்ள சுவர்கள், கூரை, பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் சுத்தும் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆலயம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெறவிருக்கின்றன. சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்ததும் மஞ்சள், சந்தனப்பொடி, மூலிகைகள் கலந்த புனித நீர் ஆலயம் முழுவதும் தெளிக்கப்படும். அதற்கு பிறகு, மூலவரின் திருமேனியில் போர்த்தப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள், நைவேத்தியம், ஆராதனை உள்ளிட்டவைகள் நடத்தப்படும். இதன் பிறகே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.