சென்னையில் இருந்து கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடியில் சிக்கிய பைக்.. உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது எப்படி?
சென்னையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற ரயிலுக்கு அடியில் சிக்கிய பைக் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டது. இதனால், 2 மணிநேரம் ரயில் தாமதமாக சென்றது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு உள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில், சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளாவின் ஆலப்புழாவிற்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல ரயில் ஆலப்புழா நோக்கி இயக்கப்பட்டது.
செவ்வாப்பேட்டையை கடந்து புட்லூர் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் எஞ்சினுக்கு அடியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக கீழே சென்று பார்த்தனர். கீழே சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் எஞ்சினுக்கு கீழே இருசக்கர வாகனம் ஒன்று சிக்கியிருந்தை கண்ட ரயில் ஓட்டுனர்கள் அதிர்ச்சிடையந்துள்ளனர்.
இதையடுத்து, ரயில்வே உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயிலின் அடியில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்த பைக், தாறுமாறாக சிக்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் சுத்தியலால் சிக்கிக்கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை எஞ்சினில் இருந்து சிறிது சிறிதாக உடைத்து அப்புறப்படுத்தினர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயிலுக்கு அடியில் சிக்கியிருந்த பைக்கை ரயில் ஓட்டுநர்கள் பொதுமக்கள் உதவியுடன் அகற்றினர். இதனால், ஆலப்புழா சென்ற ரயில் இரண்டு மணி நேர தாமதமாக சென்றது.
இதுதொடர்பான, ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் திருவள்ளூர் மார்க்கம் வழியாக செவ்வாப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். ஆனால், அப்போது ரயில் மிகவும் அருகில் வந்ததால் உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் அந்த நபர் பதற்றத்தில் தனது பைக்கை தண்டவாளத்திலே விட்டுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. இதனால், ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயிலால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் யார்? என்பது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரயிலுக்கு அடியில் இருசக்கர வாகனம் சிக்கியதைக் கண்ட பயணிகளும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் படிக்க : IND vs SA: ஜேக் காலீசின் சாதனையை சமன் செய்த குயின்டின் டி காக்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்