TN Corona LIVE Updates :தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

Background
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இதனால் அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தகவல் தெரிவித்தார். ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு வெப்பநிலையை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கொரோனா பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளின் பராமரிப்பிற்காக `குழந்தைகள் பாதுகாப்பு மையம்'
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதை நீக்குவதற்காக, தமிழகத்திலே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளின் பராமரிப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் - அமைச்சர் செந்தில் பாலாஜி
கொரோனா பரவல் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையே உள்ளது. தமிழகத்திலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறை பெரியளவில் இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் உற்பத்தி, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் அனைத்தும் வரும் 25-ந் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
புதுவையில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதி அதிகரிப்பு : ரெம்டெசிவிர் மருந்து போதியளவு கையிருப்பு - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிதது வருவது போலவே, புதுவையிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும்,அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், புதுவையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும், ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.