இந்தியா வந்த பாகிஸ்தான் புறா... கால்களில் ரகசிய வளையம்; தீவிர விசாரணை!
கடந்த மே மாதமும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர மாவட்டமான கத்துவாவில் இதே போல் பிங்க் நிற சாயம் பூசப்பட்டு இருந்த புறா பறந்து வந்தது
அழகில்தான் அதிக ஆபத்து இருக்கிறது என்பார்கள். ஒருவேளை இது அதுபோல் ஒன்றாக இருக்குமோ என்ற அச்சம் தான் இந்திய எல்லையோர காவல் படையினருக்கு எழுந்து உள்ளது. இவர்களின் இந்த அச்சத்துக்கு காரணம் ஒரு சின்னஞ்சிறிய வெள்ளை நிறப் புறா தான். புறாவில் என்னப் பிரச்சனை என்று யோசிக்கலாம். வெள்ளை நிறத்தில் அழகாக காட்சியளிக்கும் அந்த புறா இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைக்கு பறந்து வந்திருந்திருக்கிறது என்றால் சொல்லவா வேண்டும்.
தகவல் தொடர்பு கருவிகள் வருவதற்கு முன், பண்டைய காலங்களில் ஒரு நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு புறா மூலம் தூது விடுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதுபோல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் யாருக்காவது தூது விட்டிருக்கிறார்களா, அல்லது உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் இந்திய எல்லை பாதுகாப்பு போலீசுக்கு ஏற்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த அந்த புறாவை பிடித்தனர். கருப்பு நிறத் தலை மற்றும் கழுத்தும் வெள்ளை நிற உடலும் கொண்ட அந்த புறாவின் சிறகுகளில் பிங்க் நிறச்சாயம் பூசப்பட்டு இருந்தது. அதன் இரண்டு கால்களிலும் சிறிய வளையங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன.
வலது காலில் அணிவிக்கப்பட்டு இருந்த நீல நிற வளையத்தில் 0315-7827659 என்ற எண்ணும், இடது காலில் இருந்த மஞ்சள் நிற வளையத்தில் ஓகே என்றும் எழுத்தப்பட்டு இருந்ததாக எல்லை காவல் படையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மே மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர மாவட்டமான கத்துவாவில் இதே போல் பிங்க் நிற சாயம் பூசப்பட்டு இருந்த புறா பறந்து வந்ததாகவும், அதன் காலிலும் எண் குறிப்பிடப்பட்டு இருந்த வளையத்தை கண்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக கத்துவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர குமார் மிஸ்ரா கூறுகையில், “அந்த புறா எங்கிருந்து இங்கு வந்தது என எங்களுக்கு தெரியவில்லை. வேலி அருகே கத்துவா பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த புறாவை கண்டெடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் காலில் இருந்த வளையத்தில் எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததை நாங்கள் கண்டோம்” என்றார்.
பறவைகளுக்கு எல்லை இல்லை. பல நாடுகளை சேர்ந்த பறவைகள் சீசன் காலங்களில் நமது தமிழ்நாட்டில் உள்ள கோடியக்கரை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், இந்த விசயத்தில் காவல்துறையின் சந்தேகத்துக்கு முக்கிய காரணம் புறாவின் காலில் அணிவிக்கப்பட்டு இருந்த சந்தேகத்திற்கு உரிய வளையம் மட்டுமே...