24 வாரங்கள் வரையிலான கருக்கலைப்பு.. திருமணமாகாத பெண்களுக்குமான உரிமையாகிறதா?
திருமணமாகாத பெண்களுக்கு 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் அது தொடர்பான விதிகளை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தவுள்ளது.
திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சியை மீறும் செயல் என தீர்ப்பளித்த நிலையில், திருமணமாகாத பெண்களுக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் அது தொடர்பான விதிகளை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தவுள்ளது.
நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடியை, இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டது.
இதுதொடர்பாக விரிவாக பேசிய டி.ஒய். சந்திரசூட், "சட்டத்தின் கீழ் விதிவிலக்குகள் இருக்கும் போது, மருத்துவ ஆலோசனை அனுமதிக்கும் பட்சத்தில், திருமணமாகாத பெண்களை ஏன் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க கூடாது. "கணவன்" என்பதை "பார்ட்னர்" என்று மாற்றியதால் நாடாளுமன்றத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.
24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அவர்கள் திருமணமாகாத பெண்களையும் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது" என்றார். விவாகரத்து பெற்றவர்கள், கைம்பெண் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பால் பிரிந்து வாழ்பவர்கள் போன்ற திருமணமாகாத பெண்களும் தங்கள் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் வகையில் தீர்ப்பை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, "திருமணமாகாத பெண்கள் 24 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்காததற்கு ஒரு காரணம் உள்ளது. ஏனெனில் அது அவர்களின் உடல்நிலையை பாதிக்கலாம். இது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
அந்த கருத்துக்களை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும். 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைப்பது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டுள்ளது. பெண்களின் உயிரைக் கூட இழக்க நேரிடும்" என்றார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை கேட்ட நீதிமன்றம், "நிபுணர்களின் கருத்துக்களை நீதிமன்றம் முன் சமர்பிக்க வைக்க வேண்டும். இந்த பிரச்சினையில் ஐஸ்வர்யா பாடியின் உதவி தேவை" என தெரிவித்தது.
ஜூலை 21 அன்று, திருமணமாகாத பெண்களை உள்ளடக்கிய மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் நோக்கத்தை தெளிவுப்படுத்தி, ஒருமித்த உறவின் காரணமாக உருவான 24 வார கர்ப்பத்தை கலைக்க 25 வயது பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்பட்ட 25 வயது பெண், வெற்றிகரமான கருகலைப்புக்கு பிறகு பாதுகாப்பாக இருப்பதாக நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்