குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
குஜராஜ் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என விசாரணை அமைப்பு அறிக்கை அளித்த நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளபடி செய்துள்ளது.
குஜராஜ் கலவர வழக்கில் பிரதமர் மோடி நிரபராதி என சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்த நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளபடி செய்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்பியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளபடி செய்துள்ளது.
கலவரம் நடைபெற்றபோது குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்த மோடியை வழக்கிலிருந்து சிறப்பு புலனாய்வு குழு விடுவித்தது. குல்பார்கில் நடைபெற்ற கலவரத்தில் காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜாஃப்ரி உள்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றின் மிக மோசமான கலவரங்களில் ஒன்றான குஜராத் கலவரம் கோத்ராவில் ரயில் எரிப்பை தொடர்ந்து அரங்கேறியது.
இந்த ரயில் எரிப்பில் 59 பேர் கொல்லப்பட்டனர். எஹ்சானின் மனைவியான ஜாகியா ஜாஃப்ரி, சிறப்பு புலனாய்வு அமைப்பின் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மத கலவரத்தில், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரின் சதி வேலை நடந்திருப்பதாகக் கூறி, மீண்டும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஜாஃப்ரி மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், தினேஷ் மஹேஷ்வரி, சி.டி. ரவிகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு, டிசம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. அகமதாபாத் குல்பார்க்கில் 29 பங்களாக்கள், 10 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே வாழ்ந்து வந்தனர். இங்கு நடைபெற்ற கலவரம் தொடர்பாக மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்தது.
இந்த கலவரத்தில்தான் காங்கிரஸ் எம்பி எஹ்சான் உள்பட 68 பேர் இழுத்து செல்லப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு எஹ்சான் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், அவர்கள் பதில் அளிக்கவில்லை என்றும் ஜாகியா குற்றம் சாட்டியிருந்தார்.
கலவரம் நடைபெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சிறப்பு புலனாய்வு குழு பிரதமர் மோடி உள்பட 63 பேரை வழக்கிலிருந்து விடுவித்தது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூன்று நாள் வன்முறையில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில், பெரும்பாலும் முஸ்லிம்களே ஆவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்