கடும் நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு.. உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.. அடுத்து என்ன?
முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
![கடும் நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு.. உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.. அடுத்து என்ன? Supreme Court Defers Chandrababu Naidu case Hearing To Oct 9 know more details here கடும் நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு.. உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.. அடுத்து என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/965690c555e2f00e40cc7a10734a81b71696333795333729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைதான சந்திரபாபு நாயுடுவின் காவலை, வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆந்திராவை பதற வைத்த சந்திரபாபு கைது:
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள அவருக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
சந்திரபாபுவுக்கு மேலும் நெருக்கடி:
ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கை அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வி விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், ஆந்திர அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முகுல் ரோஹத்கியை நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.
இதற்கிடையே, வாதிட்ட ரோஹத்கி, "ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17Aவின் கீழ் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். ஏன் என்றால், இந்த சட்டப்பிரிவு 2018ஆம் ஆண்டுதான் கொண்டு வரப்பட்டது. ஆனால், வழக்கின் விசாரணை 2017ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது" என்றார்.
சந்திரபாபு நாயுடுவின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, அபிஷேக் சிங்வி மற்றும் சித்தார்த் லுத்ரா, "இது ஒரு அரசியல் வழக்கு தவிர வேறொன்றும் இல்லை. 17A பிரிவின் கடுமையான விதிகள் இந்த விஷயத்தில் பொருந்தும். எப்ஐஆருக்கு மேல் எப்ஐஆராக பதிவு செய்து வருகிறார்கள். ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதபதிகள், வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)