Survivor Abortion: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி இல்லையா? விரைந்து வந்த நீதிபதிகள் ..பரபரத்த நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், கர்ப்பமாகி 26 வாரங்கள் ஆகிவிட்டதால், அதை கலைக்க அனுமதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்தார். தற்போது, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு அமர்வை அமைத்துள்ளது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கர்ப்பத்தை கலைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த கர்ப்பத்தை கலைப்பது அந்த பெண்ணுக்கு ஆபத்தாக மாறிவிடும். இந்த சூழ்நிலையில்தான், உச்ச நீதிமன்றம் அதிரடியாக செயல்பட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்துள்ளது.
வழக்கின் பின்னணி:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், கர்ப்பமாகி 26 வாரங்கள் ஆகிவிட்டதால், அதை கலைக்க அனுமதிக்கக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அடுத்த நாள் விசாரணைக்கு எடுத்து கொண்ட உயர் நீதிமன்றம், மருத்துவ ஆய்வுக்கு உத்தரவிட்டது. 48 மணி நேரத்திற்குள் மருத்துவ ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்ட போதிலும், வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் வகையில் சாதகமான மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதிரடியாக செயல்பட்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், வழக்கை விசாரிக்க பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புய்யன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வை உடனடியாக அமைத்தார்.
நீதி கேட்டு வந்த பெண்:
சிறப்பு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு விரைந்த நீதிபதிகள், இன்று காலை 10:30 மணிக்கு வழக்கு விசாரணையை தொடங்கினர்.
அப்போது, எந்த காரணமும் இன்றி இரண்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்துவிட்டு, பின்னர், தள்ளுபடி செய்ததற்காக நீதிபதி நாகரத்னா தனது அதிருப்தியை தெரிவித்தார்.
"ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீதிமன்றம், எதற்காக காத்திருந்தது? இதன் காரணமாக எத்தனை மதிப்புமிக்க நாட்களை இழந்துவிட்டோம். இதுபோன்ற வழக்குகளில் அவசரமாக விசாரிக்க வேண்டியிருக்கிறது. குறைபாடுள்ள அணுகுமுறைக்கு இடமில்லை" என நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, இன்றைய தினமே அந்த பெண்ணுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி, ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
மருத்துவக் கருவுற்றல் (திருத்தம்) சட்டம், 2021இன் கீழ், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள் உள்ளிட்டோர் கர்ப்பத்தை கலைப்பதற்கான அதிகபட்ச கால வரம்பு 24 வாரங்களாகும்.