அபார்ஷன்.. ரத்தம்..குற்றப்பத்திரிகை தகவல்கள்.. நடிகை ஜியா கான் வழக்கில் சிபிஐ மனுவை நிராகரித்தது நீதிமன்றம்..
நடிகை ஜியா கான் வழக்கில் சிபிஐ மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நடிகை ஜியா கான் வழக்கில் சிபிஐ மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜியா கான் தற்கொலைக்கு நடிகர் சூரஜ் பஞ்சோலி தூண்டுதலாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலும் விசாரணை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனுவில் ஜியா கான் தற்கொலைக்கு முன்னர் அவரும், நடிகர் சூரஜும் ப்ளாக்பெர்ரி செல்போனில் பறிமாறிக் கொண்ட குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீட்க அனுமதி வேண்டும். அவ்வாறு செய்தால் வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜியா கான் பயன்படுத்திய துப்பாட்டாவையும் அவர் பயன்படுத்திய செல்போனையும் அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு முகமைக்கு அனுப்ப அனுமதி கோரி டிசம்பர் 2019-லேயே சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் சூரஜின் வழக்கறிஞரும் செல்போன் குறுந்தகவலை மீட்டெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி கஜினி கதாநாயகி..
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் கடந்த 2013-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். கொலையில் 8 முக்கிய அம்சங்களை போலீஸார் விசாரிக்கத் தவறிவிட்டனர் என்று ராபியா தெரிவித்திருந்தார்.
மகள் கொலை பற்றி விசாரிக்க அவர் பணியமர்த்திய இலங்கையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் பெய்ன் ஜேம்ஸ், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல என்று தெரிவித்துள்ளார். ஜியா தூக்கில் தொங்கியது திட்டமிடப்பட்ட செயல் என்று கூறினார். ஜியாவின் உடலில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதாகவும் பெய்ன் தெரிவித்தார். ஜியாவை சூரஜ் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ராபியா கூறி வருகிறார். ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று தொடர்ந்து வாதாடி வந்தது. இந்நிலையில்தான் ஜியா கான் தற்கொலைக்கு நடிகர் சூரஜ் பஞ்சோலி தூண்டுதலாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலும் விசாரணை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சிபிஐ சமர்பித்த குற்றப் பத்திரிகை நகலில், ஜியா கான் கருவுற்றிருந்ததாகவும், அதைக் கலைக்கும் முயற்சியில், ரத்தப்போக்கு ஏற்பட்டபோது, சூரஜ் பஞ்சோலி கைகளாலேயே கருவை எடுத்து கழிவறையில் அப்புறப்படுத்தியதாக தகவல்கள் தரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது