PM Modi: ”இந்தியா என்று பெயர் வைத்ததாலேயே..” எதிர்க்கட்சி கூட்டணியை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்ட பிரதமர் மோடி
"கிழக்கிந்திய கம்பெனி தொடங்கி இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத அமைப்புகள் வரையில் பல அமைப்புகளின் பெயர்களில் கூட இந்தியா என்ற வார்த்தை உள்ளது"
மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் முதல் மனதை உலுக்கும் வகையில் மணிப்பூர் தொடர்பாக நாளுக்கு நாள் வெளியாகும் செய்திகள் வரை, அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முடங்கி போன நாடாளுமன்றம்:
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம், இதன் காரணமாக முடங்கி போயுள்ளது. மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.
ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய நேரத்திற்கு மட்டுமே விவாதிக்க முடியும் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் இன்று முடங்கியது. முதலில், 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அக்கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்ட நிலையில், அதை குறிவைத்து பிரதமர் சாடினார்.
எதிர்க்கட்சிகளை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்ட பிரதமர் மோடி:
கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத அமைப்புகள் வரையில் பல அமைப்புகளின் பெயர்களில் கூட இந்தியா என்ற வார்த்தை உள்ளது என பிரதமர் மோடி விமர்சித்தார்.
"இந்தியா என்ற பெயர், மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் ஒரு முயற்சியாகும். இந்தியா என்று பெயர் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்ப்பதே அவர்களின் (எதிர்க்கட்சி) வேலை. நமது ஆட்சியின் பலன்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்வதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும்.
ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தற்போதைய இந்தியத் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால்தான் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன" என மோடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பேசியதை விவரித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகும், எதிர்க்கட்சியில் தொடர்ந்து இருப்போம் என்பதை அதன் தலைவர்கள் உணர்ந்ததால், எதிர்க்கட்சிகள் விரக்தியடைந்தன. எந்த திசையில் பயணிக்க வேண்டும் என ஒன்றும் தெரியாமல் முழிக்கும் எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை" என்றார்.
மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தயாராகும்படி கூறிய அவர், கட்சியின் வியூகம் குறித்து எம்பிக்களிடம் எடுத்துரைத்தார்.
இதை தொடர்ந்து, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, தனது ட்விட்டர் பக்கத்தில், "பயங்கரவாதிகள், நக்சலைட்கள் தங்கள் பெயருக்கு முன்னால் இந்தியா என்று சேர்ப்பது ஃபேஷன் ஆகிவிட்டது. எதிர்கட்சிகளும் அன்னிய சக்திகளின் உதவியுடன் இந்தியாவை பலவீனப்படுத்த இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.