Pocso Judgement: “விரும்பாத பெண்ணை ”வா வா” என தொடர்ந்து அழைத்தால் பாலியல் துன்புறுத்தலே” - நீதிமன்றம் அதிரடி
விருப்பமில்லாத பெண்ணை வா வா என அழைத்தாலும் பாலியல் குற்றம் தான் என, நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
விருப்பமில்லாத பெண்ணை வா வா என அழைத்தாலும் பாலியல் குற்றம்தான் என, மும்பை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஒரு பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாக பின் தொடர்வது, “வா வா” என்று அழைப்பதும் கூட பாலியல் தொல்லை தான் என, மும்பையில் உள்ள திந்தோஷி செசன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட 32 வயது நபருக்கு 6 மாத காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
2015ல் நடந்த சம்பவம்:
பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தனது ஃப்ரெஞ்சு டியூசனுக்கு நடந்து செல்லும் போது இளைஞர் ஒருவர் சைக்கிளில் பின் தொடர்ந்து உள்ளார். அதோடு, ஆஜா ஆஜா (வா, வா) என சத்தமாக தொடர்ந்து தினசரி கத்தியுள்ளார். அருகில் இருந்த நபர்களிடம் சொல்லி பிடிக்க முயல்வதற்குள், அந்த சைக்கிளில் தப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பாக தனது டியூசன் டீச்சர் மற்றும் பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை பின் தொடர்ந்த நபர், அப்பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் இரவு நேர வாட்ச்-மேன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.
கைதும்..ஜாமினும்..
வழக்கின் அடிப்படையில் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நபர் கைது செய்யப்பட்டபோது, தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், 3 வயது குழந்தையை கொண்டுள்ள ஏழை எனவும் தெரிவித்துள்ளார். விசாரணைக்காக 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்பு ஜாமின் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில், வழக்கின் விசாரணையின் முடிவில் பெண்ணின் விருப்பமின்றி பின் தொடர்வதும், வா வா என அழைப்பதும் கூட பாலியல் குற்றம்தான், எனவே 18 வயதுக்குட்பட்ட அந்த சிறுமியிடம் குறிப்பிட்ட நபர் நடந்து கொண்டது, போக்சோ பிரிவின்படி தவறு எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.