(Source: ECI/ABP News/ABP Majha)
Sara Tendulkar: சாரா டெண்டுல்கரையும் விட்டுவைக்காத டீப் ஃபேக்! கொந்தளித்த சச்சின் மகள்!
ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலை தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்களால் தற்போது பாதிப்படைந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.
செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை தற்போது தீய வழியில் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து காணப்படுகிறது.
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து ஆபாசமாக எடிட் செய்யப்பட்ட வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த வீடியோ உண்மையானதை போன்றே இருந்தது.
விஸ்வரூபம் எடுத்த டீப் ஃபேக் விவகாரம்:
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது போன்று நடைபெறமால் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட டீப் ஃபேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சில நடிகைகளை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படங்கள் வெளியானது.
இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டீப் ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த பிரச்னை நின்றபாடில்லை.
ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலை தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்களால் தற்போது பாதிப்படைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் ஆவார். சாரா டெண்டுல்கரின் டீப் ஃபேக் புகைப்படங்கள், சமூக ஊடங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
குறிவைக்கப்படும் பிரபலங்கள்:
டீப் ஃபேக் புகைப்படங்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தன்னுடையது போல சித்தரிக்கும் வகையில் பொய்யான சமூக ஊடக கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நம்மின் மகிழ்ச்சியான, துக்கமான மற்றும் அன்றாட செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள ஒரு அற்புதமான இடமாக சமூக ஊடகங்கள் உள்ளது. இருப்பினும், இணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.
யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் என்னுடைய சில பொய்யான புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. நான் இதை கண்டிக்கிறேன். எக்ஸ் வலைதளத்தில் ஒரு சில கணக்குகள் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. என்னிடம் எக்ஸ் கணக்கு இல்லை. எக்ஸ் வலைதளம், அத்தகைய கணக்குகளை சரிபார்த்து சஸ்பெண்ட் செய்யும் என்று நம்புகிறேன்.
ஒருவரின் இழப்பில் பொழுதுபோக்கை உருவாக்கக்கூடாது. நம்பிக்கை மற்றும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல்தொடர்புகளை ஊக்குவிப்போம்" என குறிப்பிட்டுள்ளார். சாராவின் இந்த இன்ஸ்டா பெரும் விவாத்தை கிளப்பியுள்ளது.