சபரிமலை ஐயப்பன் கோவில்: மண்டல பூஜை சாதனை! பக்தர்கள் கூட்டம், வருமானம் உச்சம் தொட்டது!
மண்டல பூஜை காலத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக கோவில் வருமானம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் தேதியான நவம்பர் 17ம் தேதி துவங்கி தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை மொத்தம் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. டிசம்பர் 27ம் தேதியன்று மாலை மண்டல பூஜைக்கு பிறகு சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி தான் நடைதிறக்கப்பட உள்ளது.
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக கோவில் வருமானம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவசம் போர்டு வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தாண்டு சீசனில் கடந்த 41 நாட்களில் மட்டும் சபரிமலை கோவிலுக்கு ரூ.332,77,05152 வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை பாயசம் விற்பனை மூலமாக மட்டும் ரூ.142 கோடியும், அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12 கோடியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் ரூ.297, 06,67,679 வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.35.70 கோடி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் மட்டும் உண்டியல் வசூலாக ரூ.83.17 கோடி பெறப்பட்டுள்ளது.
மண்டல பூஜை காலத்தில் மட்டுமே ரூ.332 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ள நிலையில், டிசம்பர் 30ம் தேதியான நாளை மாலை மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 30ம் தேதி துவங்கி, ஜனவரி 19ம் தேதி இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு ஐயப்ப சீசன் நிறைவடைய இன்னும் 21 நாட்கள் உள்ளது. புது வருட பிறப்பு, மகரஜோதி தரிசனம் ஆகியவற்றிற்கு இனி வரும் நாட்களில் இன்னும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில் சபரிமலை கோவில் வருமானம் மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டல பூஜை நிறைவடைந்திருந்தாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை காலமான கடந்த 41 நாட்களில் மட்டும் 32,49,756 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது முந்தைய மண்டல பூஜை காலங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவிலான புதிய உச்சம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 28,42,447 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்திருந்தனர். மண்டல பூஜைக்கு முந்தைய நாளான டிசம்பர் 26ம் தேதி அன்று மட்டும் 37,521 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜை நாளான டிசம்பர் 27ம் அன்று பகல் 1 மணி வரை 17,818 பேர் தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்கு கால விற்பனைக்காக 12 லட்சம் டின் அரவணை தயாராக வைக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளது.



















