Rajiv Gandhi Case: ஆறு பேர் விடுதலைக்கு சிக்கலா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசு
தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
![Rajiv Gandhi Case: ஆறு பேர் விடுதலைக்கு சிக்கலா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசு Rajiv Gandhi assassination Case Centre Challenges Release Of Nalini Sriharan Murugan Santhan Robert Payas Jayakumar supreme court Rajiv Gandhi Case: ஆறு பேர் விடுதலைக்கு சிக்கலா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/24d004ee98a2e371440053dc99fe4c0e1668702480951224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் எழுவர் விடுதலை என்பது உணர்வுப்பூர்வமான அரசியல் பிரச்னையாக இருந்து வருகிறது. இச்சூழலில், கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
Centre files review petition in the Supreme Court against the November 11 order allowing the release of all convicts in the Rajiv Gandhi assassination case. pic.twitter.com/stcCnGENnz
— ANI (@ANI) November 17, 2022
போதிய விசாரணை நடத்தப்படாமலேயே குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதாக மத்திய அரசு வாதிம் முன்வைத்துள்ளது. இதன் காரணமாக, இயற்கை நீதியின் கொள்கைகள் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளது என்றும் இதன் விளைவாக நீதி சிதைந்துள்ளதாகவும் மத்திய அரசு மறுசீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
"இத்தகைய முக்கியமான விஷயத்தில், நாட்டின் பொது ஒழுங்கு, அமைதி மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் இந்த விவகாரம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இதில் இந்திய ஒன்றியத்தின் உதவி மிக முக்கியமானது. ஆறு குற்றவாளிகளில் நான்கு பேர் இலங்கை நாட்டவர். நாட்டின் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த கொடூரமான குற்றத்திற்காக பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம். எனவே, அவர்களின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசின் வரம்பின் கீழ் வருகிறது" என மத்திய அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு, மே மாதம், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இது, தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பே, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)