Karnataka Election: பசவ ஜெயந்தி விழா.. லிங்காயத் சமூகத்தின் வாக்குகளை கவர களத்தில் இறங்கிய ராகுல்காந்தி.. பரபரக்கும் கர்நாடக தேர்தல்..!
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடக பசவனா பாகேவாடியில் பிறந்து சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் 12ஆம் ஆண்டு நூற்றாண்டை சேர்ந்த பசவண்ணா. பாலின, சாதிய பாகுபாட்டை கடுமையாக எதிர்த்த இவர் மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரின் தத்துவத்தை பின்பற்றுபவர்களே லிங்காயத்துகள் ஆவர்.
பசவ ஜெயந்தி விழா:
கர்நாடக மாநிலத்தின் செல்வாக்கு மிக்க பிரிவுகளாக லிங்காயத்துகள் இருக்கின்றனர். இந்நிலையில், பசவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாகல்கோட் மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.
வரும் மே 10ஆம் தேதி, கர்நாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசவ ஜெயந்தி விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது. பாகல்கோட் மற்றும் விஜய்பூர் மாவட்டங்களுக்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். காலையில் ஹூப்ளி வந்தடைந்த பிறகு, ஹெலிகாப்டரில் பாகல்கோட்டில் உள்ள கூடலசங்கமா மைதானத்துக்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள கூடலசங்கமா கோயில் மற்றும் பசவண்ணாவின் ஒற்றுமை மண்டபத்துக்குச் செல்கிறார்.
பேரணி:
கூடலசங்கமாவில் உள்ள பசவ மண்டபத்தில் பசவ ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தசோஹ பவனில் அளிக்கப்படும் பிரசாதத்தை உட்கொள்கிறார் ராகுல் காந்தி. மாலையில் விஜயப்பூருக்கு புறப்பட்டு சென்று மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை சாலை பேரணியில் கலந்து கொள்கிறார்.
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. கர்நாடக தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எடுத்த ஆயுதம்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக.
வியூகம் அமைத்து செயல்பட்டு வரும் பாஜக, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ரத்து செய்தது மட்டும் இன்றி, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான லிங்காயத் மற்றும் வொக்கலிகாவுக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இப்படி அதிரடியான நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
தன்னுடைய பங்கிற்கு காங்கிரஸ் கட்சியும் இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.