Rahul Gandhi: "இது நம் வீடு இல்லை.. எங்கே போவது என்று தெரியவில்லை.." சோனியா கூறியதை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி..!
எனக்கு 52வயதாகிறது. இன்று வரை சொந்தமாக வீடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 மாத காலம் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ராகுல் காந்தி பேசினார்.
”எனக்கு வீடு இல்லை”
எனக்கு 52 வயதாகி விட்டது. இன்று வரை எனக்கு வீடு இல்லை. எங்கள் குடும்பத்தின் வீடு அலகாபாத்தில் உள்ளது, அதுவும் எங்களுக்கு சொந்தம் இல்லை. பாரத் ஜோடா யாத்திரையில் கன்னியாகுமரியில் தொடங்கும் போது, எனது பொறுப்பு என்ன என்று, என்னை நானே கேட்டுக் கொண்டேன். இந்தியாவைப் புரிந்து கொள்ளப் புறப்பட்டேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓடுகிறார்கள், என் பொறுப்பு என்ன என்று நினைத்து கொண்டிருந்தேன்.
நிறைய யோசித்த பிறகு, இந்த யோசனை என் மனதில் தோன்றியது. நான் என் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சொன்னேன், இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கிறார்கள், தள்ளுதல் இருக்கும், காயம் ஏற்படும், யாத்திரையின் போது, மக்கள் சந்திக்க வருவார்கள், எனவே அடுத்த நான்கு மாதங்களுக்கு இந்த யாத்திரைதான் என் வீடு என தெரிவித்தார்.
எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, 1977 ஆம் ஆண்டில் , நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக என் தாயார் என்னிடம் கூறினார். இது எங்கள் வீடு இல்லை என்று அம்மா முதல் முறையாக எங்களிடம் கூறினார். எங்கே போவது என்று கேட்டபோது, தெரியாது என்றார்.
”இந்திய உணர்வை விதைத்தோம்”
காஷ்மீரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களிடையே இந்திய உணர்வை, மூவர்ணக் கொடியின் உணர்வை நாங்கள் விதைத்தோம். நீங்கள் (பிரதமர்) ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களிடமிருந்து கொடியின் உணர்வைப் பறித்தீர்கள். அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். மூவர்ணக் கொடி என்பது இதயத்தின் உணர்வு, இந்த உணர்வை காஷ்மீர் இளைஞர்களின் இதயங்களில் விதைத்தோம்.
அதானிக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்
ராகுல் காந்தி தனது உரையில் அதானி வழக்கையும் குறிப்பிட்டார். அதானிக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம். அனைத்து அமைச்சர்களும் அதானியை ஏன பாதுகாக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஏன் அதானியை பாதுகாக்க வேண்டும்?
அதானியும், மோடியும் ஒன்றுதான், நாட்டின் அனைத்து பணமும் ஒரு நபரின் கைக்கு செல்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு கம்பெனிக்கு (ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி) எதிராக இருந்தது, இப்போது வரலாறு திரும்ப வருவதை நீங்கள் காணலாம். காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக போராடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.





















