பஞ்சாபி பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: தேர்தல் முன்விரோதம் காரணமா?
இறந்தவர் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள டான் கலான் கிராமத்தைச் சேர்ந்த தர்மிந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
பஞ்சாபின் பாட்டியாலாவில் கடந்த செவ்வாய் அன்று அங்குள்ள அர்பன் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் அருகே இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பஞ்சாபி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள டான் கலான் கிராமத்தைச் சேர்ந்த தர்மிந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டான் கலான் கிராம கபடி கிளப்பில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை இரவு டான் கலான் கிராமம் மற்றும் தேரி கிராமத்தின் போட்டி குழுக்களுக்கு இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. மோதலின் போது, ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் முழுவதும் மோதலை நேரில் கண்டவர்களின் கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோவில் பாட்டியாலா தெருக்களில் ஆயுதமேந்திய கும்பல் ஓடுவதைக் காட்டுகிறது. வீடியோவில், பல துப்பாக்கிச் சூடுகளும் உள்ளூர் மக்களிடையே பீதியை உருவாக்கியது.
"செவ்வாய்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது, இரு குழுக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் வன்முறையாக மாறியது மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்" என்று பாட்டியாலா எஸ்பி ஹர்பால் சிங் கூறினார்.
"விசாரணையில், ஹர்பீர் சிங் என்ற மற்றொரு பல்கலைக்கழக மாணவருக்கு, பாதிக்கப்பட்ட மாணவர் மீது தனிப்பட்ட விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நான்கு பேர் மீது அர்பன் எஸ்டேட் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க விசாரணை நடந்து வருகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால், பலியானவர் கபடி வீரர் என்பதை போலீசார் மறுத்துள்ளனர். "அவர் ஒரு கபடி வீரர் என்பது ஒரு வதந்தி. அவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்," என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது, கானூரில் ஆம் ஆத்மி கட்சிக்கு சிங் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கல் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. மார்ச் 14 அன்று ஜலந்தரில் நான்கு ஆசாமிகளால் நங்கல் சுட்டுக் கொல்லப்பட்டார். திட்டமிட்டு நிகழும் குற்றங்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்கிழமை வலியுறுத்தியபோதும், புதிய துப்பாக்கிச் சூடு சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. ஏடிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் குண்டர் தடுப்பு பணிக்குழுவை அமைக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைவர் விகே பாவ்ராவிடம் முதலமைச்சர் பகவந்த் மான் கேட்டுக் கொண்டார்.