என்றென்றும் ஹீரோ..! புனித்ராஜ்குமாரின் ஊக்கம்.. கர்நாடகாவில் அதிகரிக்கும் கண்தானம்.!
பெங்களூரிவில் ஒரு ரசிகர் புனித்தைப் போல தன் கண்களை தானம் செய்வதற்காகவே தற்கொலை செய்து கொண்டார்
மறைந்த கன்னட சூப்பர் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு அவரது ரசிகர்கள் கண்தானம் செய்வதற்காக மருத்துவமனைகளில் வரிசைக் கட்டி நிற்கின்றனர். இரண்டு நாட்களாகவே கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு போனில் அழைத்து கண் தானம் தொடர்பாக பலரும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மிகவும் ஆபத்தான நிலைமையில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.
உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளைச் செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்றோர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட 4 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதன் மூலம் புனித் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் மரணத்திற்கு பிறகு அவரைப்போலவே ரசிகர்கள் கண்தானம் செய்வதற்காக மருத்துவமனைகளில் வரிசைக் கட்டி நிற்கின்றனர். புனித் ராஜ்குமாரின் தந்தையின் மரணத்தின்போது இதே போன்ற சூழல்தான் நிலவியது. ராஜ் குமாரும் தன்னுடைய கண்களைத் தானமாக வழங்கியிருந்தார். இருவரின் கண் தானத்தின் காரணாக 6 பேருக்கு பார்வை கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது அவர்களின் ரசிகர்களையும் கண் தானம் செய்ய ஊக்குவித்துள்ளது.
கர்நாடகாவின் பல்லாரி மற்றும் விஜயநகரா மாவட்டங்களில் புனித் ராஜ்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த மாவட்டங்களில்தான் அவருக்கு அதிக படங்கள் எடுக்கப்பட்டன. புனித்தின் எளிமை மற்றும் சாதாரண மக்களுடன் அவர் நடந்துக் கொள்ளும் விதம் ஆகியவை நிறைய பேருக்கு அவரை பிடிக்க செய்தன. அப்படி பல்லாயிரம் இதயங்களை வென்றிருந்தார் புனித். புனித் இறந்துபோனதை இன்றளவும் அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இறந்த துக்கம் தாளாமல் சில ரசிகர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பேசிய அவரது ரசிகர் ஒருவர், பெங்களூரிவில் ஒரு ரசிகர் புனித்தைப் போல தன் கண்களை தானம் செய்வதற்காகவே தற்கொலை செய்து கொண்டார். பல்லாரி, விஜயநகராவில் உள்ள ரசிகர்கள் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர்” என தெரிவித்தார்.
பெங்களூரு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், புனித்தின் கண்களை எடுத்து மாடர்ன் தொழில்நுட்பத்தின் மூலம் 4 பேருக்கு பொருத்தியுள்ளனர். இது ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கண் தானம் செய்யும் முறையை எளிமைப்படுத்தவுள்ளதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புனித் ராஜ்குமார் நினைவாக அவருக்கு சிலை நிறுவப்படும் என அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.