பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க..இலங்கை தமிழர்கள் விவகாரம் பேசப்பட்டதா?
இலங்கை தமிழர் விவகாரம், இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபருடன் பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இரு நாட்டு உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லுமா இலங்கை அதிபரின் பயணம்?
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்திய, இலங்கை உறவு குறித்து இரு நாட்டு தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர் விவகாரம், இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபருடன் பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட கலவரத்தால அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட பின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவே ஆகும்.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மட்டும் இன்றி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளார் இலங்கை அதிபர். இந்த பயணம் தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்திய மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுமா?
இந்த பயணத்தின் போது இலங்கை அதிபருடன் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வது, விசை படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே மீனவர்களில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இலங்கை அதிபர் மற்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தருவதால், மீனவர்கள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதாரம் திவாலான நிலையில், அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க பொருளாதார அவசர நிலையை அறிவித்தார். அப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதியுதவி பெற்றது. தற்போது பொருளாதாரம் சற்று முன்னேறி உள்ள நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தி, இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொது பணமாக பயன்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

