முதல் குடியரசுத் தலைவர்...சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் திரௌபதி முர்மு
Droupadi Murmu: கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்யும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு செல்லவுள்ளார்.

கேரளம் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மே 18 ஆம் தேதி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கும் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் முர்மு, மே 18 ஆம் தேதி கேரளா வந்த பிறகு, கோட்டயம் மாவட்டத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து மறுநாள் காலை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகிலுள்ள நிலக்கல் ஹெலிபேடிற்குச் சென்று பம்பைக்கு செல்வார் என கூறப்படுகிறது.
அங்கிருந்து யாத்ரீகர்களைப் போலவே சுமார் 4.25 கி.மீ உயரமான பாதையில் நடந்து செல்வாரா அல்லது மலை உச்சி ஆலயத்திற்குச் செல்ல, செங்குத்தான அவசர சாலையில் அழைத்துச் செல்லப்படுவாரா என்று உறுதியான தகவல் வெளியாகவில்லை. அவரது பயண முறை குறித்த இறுதி முடிவை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) எடுக்கும்.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவிக்கையில், குடியரசுத் தலைவர் வருகை தரவுள்ளதாக இரண்டு முதல் மூன்று வாரங்களாக தகவல் பேசப்பட்டு வந்தது. இப்போது அது உறுதியாகிவிட்டது. அவசர சாலை பழுது மற்றும் கட்டுமானப் பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்ததும், முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக இருக்கும். சபரிமலை கோயிலுக்கு ஒரு குடியரசுத் தலைவர் வருகை தருவது இதுவே முதல் முறை. அவர் பயண முறை குறித்து எஸ்பிஜி முடிவு செய்யும். அவர்களின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் கீழ்படிவோம். இங்கு பிரார்த்தனை செய்யும் முதல் ஜனாதிபதியாக அவர் இருப்பார். இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம்" என்று பிரசாந்த் கூறினார்.




















