(Source: ECI/ABP News/ABP Majha)
Womens Reservation Bill: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற பெருமைக்குரியது மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆகும்.
மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களைவில் அறிமுகப்படுத்தி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவையிலும், ஒருமனதாக மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மசோதா தற்போது சட்டம் ஆகியுள்ளது.
Government of India issues a gazette notification for the Women's Reservation Bill after it received the assent of President Droupadi Murmu. pic.twitter.com/GvDI2lGF1C
— ANI (@ANI) September 29, 2023
மக்களவையில் பெரும்பான்மையாக நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு 33% சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 171 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் இருந்த ஒரு உறுப்பினர் கூட இதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை.
மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் செப்டம்பட் மாதம் 20ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 454 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர். மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை செப்டம்பர் 19ஆம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் சமர்பித்தார். இதையடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று இந்த மசோதா நிறைவேறியது.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி, அனைத்து கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் என பலர் மத்திய அரசுக்கு பாராட்டைத் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதா மீதான விவாதடம் நடைபெற்றபோது, அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் எனவும், இன்றே இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசியிருந்தார்.
இந்த இட ஒதுக்கீடு மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்படவேண்டும். அதேபோல் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா 3 பதவிக்காலங்களுக்கு நிலுவையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னர் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும் பட்சத்தில் மக்களவையில் மகளிர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 181ஆக உயரும் என சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தெரிவித்திருந்தார். மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபின்னர்தான் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும், மகளிர் இடஒதுக்கீட்டால் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது எனவும், மகளிர் இடஒதுக்கீட்டில் எஸ்.சி எஸ்.டி பிரிவு மகளிருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.