இந்தியர்களே.. ஜெர்மனி போக ரெடியா? சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி!
இந்தியர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000-லிருந்து 90,000 ஆக உயர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
திறமையான இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக உயர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வணிகத்தின் 18வது ஆசிய-பசிபிக் மாநாடு 2024, டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார். இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவு, ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு முனையிலும் வலுவடைந்து வருவது தெளிவாகிறது.
இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை அதிகரிப்பு:
உலகின் இரண்டு வலிமையான ஜனநாயக நாடுகள். உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகள் இணைந்து, உலக நன்மைக்கான சக்தியாக மாற முடியும். இந்தியா மீதான கவனம் என்ற ஆவணம், இதற்கான செயல்முறையை வழங்குகிறது.
இதில், ஜெர்மனியின் முழுமையான அணுகுமுறை மற்றும் நீடித்த கூட்டாண்மையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவின் திறமையான தொழிலாளர்கள் மீது ஜெர்மனி வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கை குறிப்பிடத்தக்கது.
திறமையான இந்தியர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000-லிருந்து 90,000 ஆக உயர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா:
அடுத்த 25 ஆண்டுகளில் இந்த கூட்டணி புதிய உச்சங்களை எட்டும். தற்போது நூற்றுக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படும் அதே வேளையில், இந்திய நிறுவனங்களும் ஜெர்மனியில் வேகமாக விரிவடைந்து வருகின்றன.
இந்தியா பல்வகைப்படுத்தல் மற்றும் அபாயங்களைக் குறைக்கும் முக்கிய மையமாக மாறி வருகிறது. உலக வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும், உலகிற்காக உருவாக்குவதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்.
எதிர்கால உலகின் தேவைகளுக்காக இந்தியா உழைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு இயக்கம், செமிகண்டக்டர் இயக்கம், குவாண்டம் இயக்கம், பசுமை ஹைட்ரஜன் இயக்கம், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான இயக்கங்கள், டிஜிட்டல் இந்தியா இயக்கம் என இவை அனைத்தும் உலகிற்கு சிறந்த, நம்பகமான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை உங்கள் அனைவருக்கும் பல முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன" என்றார்.
இதையும் படிக்க: கனட பிரதமர் ட்ரூடோவுக்கு ஆப்பு.. ராஜினாமா செய்கிறாரா? காலக்கெடு விதித்த எம்பிக்கள்!