PM Modi UNGA speech : ’ஜனநாயகத்தின் தாய் எனப்படும் நாட்டின் பிரதிநிதி நான்’ - ஐ.நா.வில் பிரதமர் மோடி பெருமிதம்!
நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 17 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு பெரிய அளவிலான பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம் - ஐ.நா.வில் பிரதமர் மோடி
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் 76வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
அவர் பேசியதில், ‘இந்த ஆகஸ்ட் 15ல் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. வேற்றுமையில் ஒற்றுமைதான் எங்கள் ஜனநாயகத்தின் அடையாளம். கடந்த 1.5 வருடங்களில் ஒட்டுமொத்த உலகமும் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடிய பெருந்தொற்றைச் சந்தித்தது. இதில் உயிரிழந்த அனைவருக்கு எனது அஞ்சலி மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். வளர்ச்சி என்பது அனைவருக்கும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் செழிக்கச் செய்வதாகவும் இருக்கவேண்டும். நான் இங்கே ஜனநாயகத்தின் தாய் எனக் கருதப்படும் நாட்டின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசியை உருவாக்கிய பெருமை இந்தியாவையே சேரும் என்பதி இந்த ஐநா சபையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.12 வயதுக்கு மேற்பட்ட யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஊசியைச் செலுத்தலாம். இதுதவிர மற்றொரு எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியும் இறுதிகட்டத் தயாரிப்புப் பணியில் உள்ளது. மேலும் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா மருந்தையும் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளார்கள்.மற்றொருபக்கம் நீர் மாசுபாடு என்பது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 17 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு பெரிய அளவிலான பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம்’ எனப் பேசினார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 76-வது வருடாந்திரக் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடுட்டில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வந்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு, நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
Addressing the @UN General Assembly. https://t.co/v9RtYcGwjX
— Narendra Modi (@narendramodi) September 25, 2021
இந்தக் கூட்டத்தில், ஆப்கன் விவகாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், காலநிலை மாற்றம், கொரோனா பேரிடர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக தனது பயணம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அமெரிக்கப் பயணத்தால் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும். குவாட் உறுப்பு நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச முக்கியத்துவம் உள்ள பிரச்னைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் ஒரு நல்வாய்ப்பாக இது அமையும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சவால்களை இந்தியாவின் பார்வையில் இருந்து அணுகுவோம். அதற்கான எதிர்கால திட்டமிடுதலுக்கு குவாட் உச்சிமாநாடு வழிவகுக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
Also Read: மும்பையுடன் குடும்ப தொடர்புடையவர் பைடன்... ஆவணங்களை அமெரிக்காவுக்கே கொண்டுபோன மோடி!