பாஜக பிரச்சாரத்தில் ஓங்கி ஒலிக்கப்படும் காங்கிரஸின் சச்சின் பைலட் பெயர்! என்ன நடக்கிறது?
சச்சின் பைலட்டை காங்கிரஸ் தண்டித்து வருவதாக கடந்த இரண்டு நாள்களாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராஜஸ்தானில் வரும் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான் அரசியலை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக அங்கு ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைத்ததில்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
"கட்சிக்கு உயிரை கொடுத்த சச்சின் பைலட்"
அதேபோல, பிரதமர் மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. பெண்கள் பாதுகாப்பு, ஊழல், தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் என பல விவகாரங்களை கையில் எடுத்து காங்கிரஸ் கட்சியை கடுமையைாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், சச்சின் பைலட்டை காங்கிரஸ் தண்டித்து வருவதாக கடந்த இரண்டு நாள்களாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, ராஜ்சமந்த் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "குர்ஜார் சமூக தலைவரின் மகன் அரசியலில் தனக்கான இடத்தைப் பிடிக்கப் போராடுகிறார். கட்சிக்கு தன் உயிரைக் கொடுத்து, ஆட்சிக்கு வந்த பிறகு, அரச குடும்பம் அவரை பாலில் விழுந்த கொசு போல தூக்கி எரிந்தது.
அவர்கள் மறைந்த ராஜேஷ் பைலட்டிடமும் அதையே செய்தார்கள். அவருடைய மகனிடமும் அதையே செய்கிறார்கள். காங்கிரஸ் இப்போதும் கடந்த காலத்திலும் குர்ஜார்களை அவமதித்து வருகிறது" என்றார்.
கெலாட் vs பைலட் அரசியல்:
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவி வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதலமைச்சர் பதவியை பெறுவதில் இருவருக்கும் பெரிய பிரச்னை வெடித்தது.
காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டால் அசோக் கெலாட்டுக்கு முதலமைச்சர் பதவியும் சச்சின் பைலட்டுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், இருவருக்கும் அதிகார போட்டி நிலவி வந்தது. இதனால், சொந்த அரசாங்கத்திற்கு எதிராகவே சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார்.
இறுதியில், அவரின் துணை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எடுத்து முயற்சியில் பிரச்னை முடிவுக்கு வந்தது. தங்களுக்கிடையே பிரச்னை இருந்தாலும் தேர்தல் காரணமாக சச்சின் பைலட்டும் அசோக் கெலட்டும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.