(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi France Visit: அடுத்த பயணம் ஆரம்பம்.. இந்த முறை 2 நாட்கள் பிரான்ஸுக்கு பறக்கும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பிரான்சு நாட்டிற்கு மேற்கொள்ளும் 2 நாள் சுற்றுப்பயணம், இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி பிரான்சு நாட்டிற்கு மேற்கொள்ளும் 2 நாள் சுற்றுப்பயணம், இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம்:
உலக நாடுகள் உடனான நட்புறவை மேம்படுத்துவது, இந்தியாவிற்கான முதலீடுகளை ஈர்ப்பது, பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னேற்றம் காண்பது ஆகிய காரணங்களுக்காக பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தான் அண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதைதொடர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரான்ஸ் சுற்றுப்பயணம்:
பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் மீறி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அண்மையில் புதிய ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்த அமல்படுத்தினார். அதைதொடர்ந்து, போதைப்பொருள் கடத்திச் சென்றதாக 17வயது சிறுவன், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனால் ஏற்பட்ட போராட்டம் அங்கு வன்முறையாக வெடித்து பெரும் கலவரமாக மாறியது. இதனால், பிரான்ஸில் ஒரு பரபரப்பான நிலையே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் செல்ல உள்ளார்.
மோடிக்கு கிடைத்த கவுரவம்:
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 14ம் தேதியை தேசிய தினமாகவும், பாஸ்டில் சிறை தகர்ப்பு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அந்த நாளில் பாரிசில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸில் ஒரு சிறப்பு ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இதில் வெளிநாட்டு விருந்தினர்கள் யாருக்கும் இதுவரை அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முதல்முறையாக பிரதமர் மோடி அதில் பங்கேற்க உள்ளார். இதுவரை எந்த உலக தலைவருக்கும் இந்த கவுரவம் கிடைத்ததில்லை என கூறப்படுகிறது.
பயண விவரம்:
2 நாட்கள் சுற்றுப்பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் எலிசி அரண்மனையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனிப்பட்ட இரவு விருந்து அளிப்பார். தனியார் விருந்தில், இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் இருதரப்பு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார்கள். ஜூலை 14 அன்று பாஸ்டில் தின அணிவகுப்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும். லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள கோர் மார்லி முற்றத்தில் பிரான்சு அரசின் வழக்கத்தின் அடிப்படையில், பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளிப்பார். அதில் 250-க்கும் அதிகமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். லியோனார்டோ டாவின்சியின் மோனாலிசா புகைப்படத்துடன் மோடி மற்றும் மேக்ரான் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஈபிள் டவரில் நடைபெறும் வாண வேடிக்கை நிகழ்ச்சியையும் இருவரும் சேர்ந்து கண்டு களிப்பார்கள். இறுதியாக பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுவார்” என தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு துறைகளுக்கான ஒப்பந்தங்கள்:
பிரதமரின் இந்த பயணத்தின் போது, ஹெலிகாப்டர் இன்ஜின்களுக்கான முழு தொழில்நுட்ப பரிமாற்றம், இந்திய கடற்படைக்கு போர் விமானங்களை கொள்முதல் செய்வது, இந்தியாவில் ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்தியை நீட்டிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது எஸ்எஸ்என்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான கடற்படையின் தொடக்கத் திட்டத்தில் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் பாதுகாப்புத்துறை மேலும் வலுவடையும் சூழல் உருவாகும்.