Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையா - காரணம் என்ன?
"செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம் என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்.
மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோல் கொடுக்க திட்டம்:
கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர். மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது.
வாங்க மறுத்த சித்தராமையா
நேற்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர். அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர். அதனை வாங்க மறுத்த சித்தராமையா, "செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம் என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்.
நரேந்திர மோடி நிறுவிய செங்கோல்
"செங்கோல்" என்பது ஒரு ஆட்சி அல்லது அதிகாரத்தையும் சக்தியையும் குறிக்கும். தமிழ் கலாச்சாரத்தில், இது நேர்மையைக் குறிக்கிறது. மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ‘செங்கோல்’-ஐ நிறுவினார். அதனை எதிர்கட்சியான காங்கிரஸ் வலுவாக எதிர்த்தது. ஆகஸ்ட் 14, 1947 அன்று அதிகாரப் பரிமாற்றத்திற்கு தமிழ்நாட்டின் வரலாற்றுச் செங்கோல் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செங்கோல் கலாச்சாரம்
மவுண்ட்பேட்டன் பிரபு ஜவஹர்லால் நேருவிடம், இந்தியா சுதந்திரம் அடைவதைக் குறிக்கும் சின்னத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன பிறகு, சுதந்திர இந்தியாவின் அரசாங்கத்திற்கு இறையாண்மையின் பொருள் குறியீடாகத் தேவைப்பட்டது. இங்குதான் ‘செங்கோல்’ என்ற எண்ணம் வந்தது. அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் சி. ராஜபோகலாச்சாரி அந்த ஆலோசனையை நேருவிடம் கூறியுள்ளார். தற்போது சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சம்பிரதாய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. புதிய பார்லிமென்ட் மாளிகையில் அதை நிறுவும் முன், மோடிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஆதீனங்கள் வரலாற்று 'செங்கோல்'-ஐ வழங்கினர்.
அதேசமயம், ஆட்சி மாற்றத்தை குறிப்பதற்காகதான் செங்கோல் வழங்கப்பட்டது என்பதற்கான எந்த சான்றும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.