ISKCON: வங்கதேசத்தில் இஸ்கான் மதகுரு கைது - ”அட்டூழிய செயல்” விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை
ISKCON: வங்கதேசத்திற்கான இஸ்கான் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு, அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ISKCON: வங்கதேசத்திற்கான இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸை விடுதலை செய்ய, இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இஸ்கான் தலைவர் கைது:
இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் வஙகதேசத்தில் அதிகரித்து வரும் நிலையில், இஸ்கான் மதகுரு சின்மாய் கிருஷ்ண தாஸ் வங்க தேச அரசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்கான் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேச சம்மிலிதா சனாதானி ஜாக்ரன் ஜோட்டின் செய்தித் தொடர்பாளரும் மற்றும் இஸ்கான் மதகுருவுமான சின்மாய் கிருஷ்ண தாஸ் நேற்று வங்கதேச தலைநகரான டாக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சட்டோக்ராமுக்கு செல்வதற்காக சின்மாய் கிருஷண தாஸ் விமான நிலையம் வந்த நிலையில், அவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது கைதுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
கைதுக்கு காரணம் என்ன?
கடந்த அக்டோபர் மாதம் சட்டோகிராம் நகரில் நடைபெற்ற பேரணியில் வங்கதேச கொடிக்கு பதிலாக காவி நிறக்கொடியை ஏற்றியதால், வங்கதேச கொடியை கிருஷ்ண தாஸ் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின்போது இது தொடர்பாக கிருஷ்ண தாஸ் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த கைது நடைபெற்றுள்ளது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்து கோவில்கள், தெய்வங்கள் மற்றும் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பரவலான கண்டனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இந்து மதகுரு கைது செய்யப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
இந்நிலையில் இஸ்கான் தரப்பில் சின்மாய் கிருஷ்ண தாஸை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘’இஸ்கான் என்பது அமைதியை விரும்பும் ஓர் ஆன்மீக இயக்கம். தீவிரவாதத்திற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வங்க தேச அரசிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி மதகுரு கிருஷ்ண தாஸை விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என இஸ்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கைது தொடர்பாக அயோத்தி ராமர் கோவிலின் மூத்த பண்டிதர் ஆச்சர்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், ’’இது மிகவும் தவறான செயல். இந்துக்களை பாகிஸ்தான் எப்படி நடத்துமோ அதே போன்று தான் வங்கதேசம் நடத்துகிறது. இந்து மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இதுபோல் கைது செய்யப்படுகிறார்கள். நம் அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும். இல்லையெனில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் தொடரும்’’ என கூறியுள்ளார்.





















