Kerala Shocker : தொண்டையில் இட்லி சிக்கி லாரி டிரைவர் உயிரிழப்பு.. சாப்பிடும் போட்டியில் நேர்ந்த சோகம்
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இட்லி சாப்பிடும் போட்டியில் பங்கேற்றவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவுப் போட்டியில், தொண்டையில் இட்லி சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வாளையாரில் உள்ளூர் கிளப் ஒன்று ஓணம் பண்டிகையையொட்டி இட்லி சாப்பிடும் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில், சட்னி, சாம்பார் எதுவுமின்றி வெறும் இட்லியை மட்டும் சாப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்போட்டியில் ஏராளாமானோர் பங்கேற்றனர். இதில் 49 வயது மதிக்கத்தக்க சுரேஷ் என்ற லாரி ஓட்டுநர் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றார். அவர், ஒரே நேரத்தில் மூன்று இட்லிகளை வாயில் திணித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, இட்லி தொண்டையில் சிக்கி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே, அருகில் இருந்தவர்கள் இட்லியை அகற்றி அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வாளையார் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், “இறந்தவரின் பெயர் சுரேஷ், இவர் போட்டியில் பங்கேற்கும் போது இட்லியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே, பார்வையாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். எப்படியாவது முயன்று இட்லியை வெளியே எடுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் போட்டியை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “சுமார் 60 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். தொட்டுக்கொள்வதற்கு எதுவும் இல்லாமல் சாதாரண இட்லி சாப்பிடுவதுதான் போட்டி. மற்ற பங்கேற்பாளர்கள் ஒரு இட்லி சாப்பிட்டு போட்டியைத் தொடங்க, சுரேஷ் ஒரே நேரத்தில் மூன்று இட்லிகளை எடுத்துக் கொண்டார். ஒரு நிமிடத்தில், அவர் அமைதியாகி, மூச்சுத் திணறலை உணர்ந்தார், மேலும் சரிந்தார். முதலில் அவரை அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்று பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இருப்பினும், அங்குள்ள மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்” என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதூர் வார்டு பஞ்சாயத்து உறுப்பினர் பி.பி.கிரீஷ் கூறுகையில், சுரேஷ் மிகவும் சுறுசுறுப்பானவராக அறியப்பட்டவர். லாரி டிரைவராக பணிபுரிந்து, தனது தாயார் கொல்லபுரா பாஞ்சாலியுடன் வசிந்து வந்தார். உள்ளூர் வாசிகள், ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் மக்களுக்காக பல்வேறு விளையாட்டுகள் மற்றும் சிறு போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தனர். நண்பகலில் இந்த கோக சம்பவம் நடந்தேறியுள்ளது” என்று கூறினார்.
ஓணம் பண்டிகையின் போது, உள்ளூர்வாசிகள் விளையாட்டு மற்றும் போட்டிகளை ரசித்துக்கொண்டிருந்தபோது, லாரி டிரைவராக பணிபுரிந்து தனது தாயுடன் வசித்த சுரேஷ். இட்லியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்தவர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சில தினங்களுக்கு, கோவையில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டதையொட்டி, பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், பக்கத்து மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். போட்டியில், ஒரு நபர் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் பங்கேற்றனர். அதில், ஒருவர் தனது மகனின் கல்வி செலவுக்காக போட்டியில் பங்கேற்பதாக கூறியது நெகிழ்ச்சி அடைய செய்தது. அந்தப் போட்டியில், அவர் இரண்டாவதாக வென்று 50 ஆயிரம் ரூபாயை பெற்றுச் சென்றார்.
மேலும், இந்தபோட்டியால் அந்தப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டு, வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, போட்டியை நடத்த எந்த அனுமதியையும் பெறவில்லை என்று அந்த ஹோட்டலின் மேனேஜர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

