Coromandel Express Accident: நடிகர்கள் ஆர்யா, சூரி முதல் வைரமுத்து வரை... ஒடிசா ரயில் விபத்து குறித்து வேதனை தெரிவித்த திரை பிரபலங்கள்!
ஒடிசா விபத்து குறித்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஆர்யா, சூரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் வேதனை தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து நடிகர்கள் ஆர்யா,ராகவா லாரன்ஸ், சூரி, கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோர ரயில் விபத்து
நேற்று (ஜூன்.02) கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம் புரண்ட நிலையில், எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற மற்றொரு ரயிலும், தொடர்ந்து அதே பாதையில் சென்ற சரக்கு ரயிலும் தடம் புரண்ட பெட்டிகளுடன் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
பதைபதைக்கவைக்கும் இந்த ரயில் விபத்தில், இதுவரை 261 நப்ர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஒடிசா விபத்து குறித்து திரை நட்சத்திரங்கள் வேதனை தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
ஆர்யா
“ஒடிசாவில் நடந்த மோசமான ரயில் விபத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என நடிகர் ஆர்யா ட்வீட் செய்துள்ளார்.
சூரி
“நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது !! இறந்தவர்களின் குடும்பத்தினர் க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ்
“ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்” என நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத்
“விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத சோக நிகழ்வு இது. காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதோடு, அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்” என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து
ஒடிசா ரயில் விபத்துக் குறித்து வருந்தி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள கவிதை பின்வருமாறு:
“இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது”.
கமல்ஹாசன்
முன்னதாக இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தார். மேலும், என பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்க வேண்டும் என எனவும் வலியுறுத்தி ஆறுதல் தெரிவித்திருந்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவடைந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.