Odisha Train Accident : ஒடிஷா ரயில் விபத்து : இறந்த உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி இடிக்கப்படுகிறதா? பேய் நடமாட்டம் இருப்பதாக ஊர்மக்கள் அச்சம்!
"இந்த 65 ஆண்டுகால பழைய பள்ளி பல ஆண்டுகளாக இடிக்கப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்குள் அறிவியல் ஆய்வகம் உள்ளது, அதுதான் நம்மை வழிநடத்த வேண்டுமே ஒழிய மூடநம்பிக்கைகள் அல்ல," ஆட்சியர்!
பாலசோரில் ஏற்பட்ட திடீர் ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்களை மீட்டெடுக்க தற்காலிக பிணவறைகள் தேவைப்பட்டன. அதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளி ஒன்று பயன்படுத்தப்பட்ட நிலையில், இது குறித்து பல பெற்றோர்கள் அச்சம் தெரிவித்ததால், தற்போது அந்த கட்டிடம் இடிக்கப்படவுள்ளது.
பள்ளிக்குள் செல்ல மறுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
ஒடிஷா மாநிலத்தில் பள்ளிகள் ஜுன் 16 அன்றுதான் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, பஹனகா நோடல் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூன் 16 அன்று கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்படும்போது, வளாகத்திற்குள் நுழைய மறுத்துள்ளனர். பள்ளியின் அருகாமையில் நடந்த இந்த சோக விபத்தினால் குவிந்த உடல்கள் வைக்கப்பட்டதால், அப்பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக மூடநம்பிக்கைகள் கிளப்பிவிட்டுள்ளனர்.
மூடநம்பிக்கையை பரப்ப வேண்டாம்
பயம் மற்றும் மூடநம்பிக்கையைப் பரப்ப வேண்டாம் என்று பாலசோர் ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே பள்ளிக்குச் சென்றபோது அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தபோது, பணியாளர்கள் மற்றும் பல மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் இன்று காலை இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. "இந்த 65 ஆண்டுகால பழைய பள்ளி பல ஆண்டுகளாக இடிக்கப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்குள் அறிவியல் ஆய்வகம் உள்ளது, அதுதான் நம்மை வழிநடத்த வேண்டுமே ஒழிய மூடநம்பிக்கைகள் அல்ல. கட்டிடம் இடிக்கப்படுமா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்", என்று பாலசோர் கலெக்டர் ஷிண்டே TOI ஆல் மேற்கோளிட்டுள்ளார்.
பள்ளி பயன்படுத்தப்பட்ட விதம்
பாலாசோரில் ரயில் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பஹானாகா நோடல் உயர்நிலைப் பள்ளி, கடந்த வார இறுதியில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்கு 250-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துச் செல்லவும், அவற்றை மருத்துவமனை பிணவறைகளுக்கு மாற்றுவதற்கு முன்பும் வைப்பதற்கும் வசதியான தற்காலிக தங்குமிடமாக இருந்தது. இதற்காக, ஆறு வகுப்பறைகள் மற்றும் ஒரு கூடம் அந்த பள்ளியில் இருந்து பயன்படுத்தப்பட்டது. இதனால் உள்ளூர்வாசிகள் இந்த இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக புரளியை கிளப்பி வருகின்றனர்.
#WATCH | Odisha | Parts of Bahanaga school building in Balasore are being razed. This comes after the parents expressed their reluctance in sending their children to school after it was turned into a temporary mortuary for the deceased of #BalasoreTrainAccident
— ANI (@ANI) June 9, 2023
A teacher says,… pic.twitter.com/dm4zt5mHwZ
முழு கட்டடமும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது
ஊர்மக்கள் இப்படி பேசி வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இயல்பாகவே பயம் வரும் என்பதன் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து வெளிவர, அவர்களுக்கு நிபுணர் ஆலோசனைகளை ஏற்பாடு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று TOI தெரிவித்துள்ளது. மரணத்தின் கடைசி தடயங்கள் வரை அகற்றப்பட்டு முழு கட்டிடமும் சுத்தப்படுத்தப்பட்டது என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில், அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. அவற்றில் சில ஒரே நேரத்தில் கடந்து சென்ற பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகளில் கவிழ்ந்து 288 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.