அச்சச்சோ! 10இல் 3 பேருக்கு அச்சுறுத்தலாக மாறும் கொழுப்பு கல்லீரல் நோய்.. பதறும் மத்திய அரசு!
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்கள் இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. 10 நபர்களில் 3 பேர் வரை இந்த வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
மதுவால் ஏற்படாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் தகவலறிந்த, ஆதார அடிப்படையிலான நடைமுறைகள் மூலம் இந்த நோய் தொடர்பான பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
"ஆரம்பத்திலேயே நோய் கண்டறியப்பட வேண்டும்"
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் அபூர்வா சந்திரா, மதுவால் ஏற்படாத கொழுப்பு கல்லீரல் நோயை, பெரிய தொற்றா நோயாக அங்கீகரிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று கூறினார்.
உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய்கள் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார். 10 பேரில், 3 பேர் வரை இந்த நோய்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களும் பயிற்சிக் கையேடும் வெளியிடப்படுவது, இந்த நோயைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்புப் பணி அதிகாரி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, இந்த வழிகாட்டுதல்கள் கடைநிலை ஊழியர்கள் வரை சென்றடைய வேண்டும் என்றார். இதன் மூலம் ஆரம்பத்திலேயே நோய் கண்டறியப்பட்டு, எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறினார்.
கவனம் செலுத்தும் இந்தியா:
நாட்டில் 66% க்கும் அதிகமான இறப்புகளுக்கு தொற்றா நோய்கள் காரணமாக உள்ளன. தொற்றா நோய்கள் புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், மோசமான உணவுப் பழக்கம், போதிய உடல் பயிற்சிகள் இல்லாமை, காற்று மாசுபாடு போன்றவற்றால் ஏற்படுகின்றன.
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்கள் இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. 10 நபர்களில் 3 பேர் வரை இந்த வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் தொற்றா நோய்களின் சிகிச்சைக்கு இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், பொருத்தமான சிகிச்சை அளிப்பிதை உறுதி செய்யும் நோக்கில் முக்கியமான நடவடிக்கையாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.