‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு
நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மாநிலங்களைவையில் நேற்று பேசிய திமுக எம்பி சண்முகம் நாட்டில், நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்விகளை முன்வைத்தார்.
திராவிட முன்னேற்றக் கழக எம்பி எம்.சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், “தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த தரவுகளின்படி இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
அரசு பகிர்ந்துள்ள தரவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை 64,170 மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டு 89,584 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 76,628 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 74,968 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018 முதல் மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ. 63.67 கோடியை நிவாரணமாக பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் உள்ள மொத்த மனித உரிமை மீறல்கள் வழக்குகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 24,242 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டு 41,947 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 32,693 வழக்குகளும் 2020ஆம் ஆண்டில் 30,164 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் இந்த அக்டோபர் 31 வரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் மனித உரிமை மீறல் வழக்குகளில் 40% உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளது.
டெல்லியில் 2018ஆம் ஆண்டில் 6,562 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 5,842 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 6,067 வழக்குகளும் மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை 4,972 வழக்குகளும் பதிவாகியுள்ளன என மத்திய அரசு பகிர்ந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்