`மூன்றில் ஒரு கணவனால் நிகழ்த்தப்படும் வன்முறையால் பாதிப்பு!’ - தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் தகவல்!
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில், 18 வயது முதல் 49 வரையிலான பெண்களுள் மூன்றில் ஒருவர் கணவரால் வன்முறையை அனுபவித்துள்ளனர்; 6 சதவிகிதம் பேர் திருமண உறவில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம் திருமண உறவில் பாலியல் வன்கொடுமை மீதான வழக்கு விசாரணையில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவர் அதனைக் குற்றமாக்குவதையும், மற்றொருவர் அதனை எதிர்த்தும் தீர்ப்பு அளித்திருந்தனர். மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தனர். சமூக ஆர்வலர்கள் பலரும் இதனை எதிர்த்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு வரும் போது, திருமண உறவில் பாலியல் வன்கொடுமை, இல்லங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறை முதலானவை பேசப்படும் என்பது இதில் ஆறுதல்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில், 18 வயது முதல் 49 வரையிலான பெண்களுள் மூன்றில் ஒருவர் தன் கணவரால் வன்முறையை அனுபவித்துள்ளனர். மேலும் சுமார் 6 சதவிகிதம் பேர் திருமண உறவில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-21ஆம் ஆண்டுகளில் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் மூலமாக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் 6.37 லட்சம் குடியிருப்புகளில் வாழும் சுமார் 7.24 லட்சம் பெண்கள், 1.01 லட்சம் ஆண்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளின் படி, திருமணம் செய்த பெண்களுள் சுமார் 32 சதவிகிதம் பேர் தங்கள் கணவர்களால் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும், கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதற்கு முன்பான 12 மாதங்கள் வரை, இவற்றுள் ஏதேனும் வகையிலான வன்முறையை சுமார் 27 சதவிகிதம் பேர் எதிர்கொண்டுள்ளனர். திருமணமான பெண்களுள் 29 சதவிகிதம் பேர் உடல்ரீதியான வன்முறையையும், 14 சதவிகிதம் பேர் மன ரீதியான வன்முறையையும் எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 2015-16ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் சுமார் 33 சதவிகிதம் பெண்கள் தம் கணவர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின் தரவுகளின்படி, திருமணமான பெண்களுள் சுமார் 25 சதவிகிதம் பேர் கணவனால் கன்னத்தில் அறையப்பட்டுள்ளனர்; 12 சதவிகிதம் பெண்கள் தள்ளிவிடப்படுதல், தன் மீது ஏதேனும் பொருள் தூக்கி எறியப்படுதல் முதலானவற்றை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 5 சதவிகிதம் பெண்கள் தாங்கள் விருப்பம் இல்லாத போது, தம் கணவர்களால் பலவந்தப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் விருப்பம் இல்லாத போது, கணவர்களால் மிரட்டப்பட்டு பாலியல் உறவு கொள்ளப்பட்டதாக 4 சதவிகிதம் பெண்களும், 3 சதவிகிதம் பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு கணவர்களால் பலவந்தப்படுத்தப்பட்டு சில பாலியல் செயல்களைச் செய்வதற்குத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் நகரங்களில் வாழும் பெண்களை விட கூடுதலாக குடும்ப வன்முறையை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.