Ujwala Scheme : ஒருமுறை கூட சிலிண்டர் வாங்காத 90 லட்சம் பேர்... பரிதாப நிலையில் உஜ்வாலா திட்டம்..
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்த பயனாளர்களில் 90 லட்சம் பேர் கடந்த ஓராண்டில் ஒருமுறை கூட, மறுமுறை எரிவாயு சிலிண்டரை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
![Ujwala Scheme : ஒருமுறை கூட சிலிண்டர் வாங்காத 90 லட்சம் பேர்... பரிதாப நிலையில் உஜ்வாலா திட்டம்.. nearly 90 lakh people did not refilled their cylinders even one time under prime ministers ujjwala scheme Ujwala Scheme : ஒருமுறை கூட சிலிண்டர் வாங்காத 90 லட்சம் பேர்... பரிதாப நிலையில் உஜ்வாலா திட்டம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/10/6640ecb7f78c29b310d14608a7e1e297_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்த பயனாளர்களில் 90 லட்சம் பேர் கடந்த ஓராண்டில் ஒருமுறை கூட, மறுமுறை எரிவாயு சிலிண்டரைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில், மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம், நாட்டிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுத் தொடங்கப்பட்டது. பின்னர், இத்திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல் எட்டப்பட்டது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதோடு, 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்கு உஜ்வாலா 2.0 திட்டம் என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தால் பயனடைந்த பயனாளர்கள் எத்தனை பேர் மீண்டும் எரிவாயு உருளையை வாங்கினர்? ஒரு முறைக்கு மேல் எரிவாயு உருளையை வாங்கியவர்கள் எத்தனை பேர் என்று தகவல் அரியும் உரிமைச்சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், உஜ்வாலா திட்டத்தால் பயன்பெற்ற பயனாளர்களில் 90 லட்சம் பேர் கடந்த ஓராண்டில் ஒரு முறைகூட மற்றொரு எரிவாயு உருளையை வாங்கவில்லை என்றும், சுமார்.1.08 கோடி பேர் ஒரே ஒரு முறை மற்றொரு எரிவாயு உருஐயை வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளன.
இந்தியன் ஆயில் நிறுவனம் அளித்துள்ள பதிலில், 2021-2022 நிதியாண்டில் கடந்த மார்ச் 21ம் தேதி நிலவரப்படி இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் 65 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கவில்லை என்றும், சுமார் 52 லட்சம் பேர் ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அளித்துள்ள பதிலில், 2021-2022 நிதியாண்டில், இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் 9.12 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கவில்லை என்றும், சுமார் 27.58 லட்சம் பேர் ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அளித்துள்ள பதிலில், 2021-2022 நிதியாண்டில், இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் 15.96 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கவில்லை என்றும், சுமார் 28.56 லட்சம் பேர் ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8.99 கோடி பேர் இதுவரை பயனடைதுள்ள நிலையில், 90 லட்சம் பேர் மீண்டும் எரிவாயு உருளையை வாங்கவில்லை என்றும், 1.08 கோடி பேர் ஒரே ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர்(refill) வாங்கியுள்ளனர் என்று இந்நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)