மருமகனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன மாமியார்: பெற்ற மகளுக்கே வில்லியாக மாறிய தாய்..!
மேற்கு வங்கத்தில் மகளின் கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த தாய், மகளின் வாழ்க்கைக்கு வில்லியாக மாறி மருமகனுடன் வீட்டை விட்டு ஓடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டம். ஹவுராவில் உள்ள ராம்புர்கஹத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா தாஸ். இவர் கடந்த 2016ம் ஆண்டு கிருஷ்ணகோபால் தாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. வாக்குவாதம் காரணமாக கிருஷ்ணகோபால் தாஸ், தனது மனைவியான பிரியங்கா தாசை தாக்கத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து, இரு வீட்டாரும் சமரசம் பேசியுள்ளனர். இதன் முடிவில், கிருஷ்ணகோபால் தாஸ் சில காலம் பிரியிங்கா தாசின் வீட்டிலே இருக்குமாறு இரு குடும்பத்தின் பெரியவர்களும் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, கிருஷ்ணகோபால் தாசும், பிரியங்கா தாசின் வீட்டிற்கு சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துள்ளார். சில காலம் சென்ற பிறகு, மனைவி பிரியங்கா தாஸ் தனியாக சென்று விடலாம் என்று கூறியும் கிருஷ்ணகோபால் தாஸ் வர மறுத்துவிட்டார்.
தனது வீட்டில்தானே இருக்கிறோம் என்று பிரியங்கா தாசும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாளடைவில் தனது கணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை பிரியங்கா தாஸ் கண்டுபிடித்துள்ளார். மேலும், தனது தாயுடன் அடிக்கடி கிருஷ்ணகோபால் தாஸ் பேசி வருவதையும் பிரியங்கா தாஸ் கண்டுள்ளார். இதனால், குழப்பமடைந்த பிரியங்கா தாஸ் ஒருநாள் தனது கணவரும், தனது தாயும் கள்ளக்காதலர்களாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, தனது தாயிடமும், கணவரிடமும் இதுதொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும், தனது தாயும், கணவரும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டு பிரியங்கா தாஸ் மிகவும் மனம் நொந்துள்ளார். விவகாரம் தங்களது குடும்பத்திற்கு தெரிந்துவிட்டதால் இனி தங்களுக்கு பிரச்சினை என்று எண்ணிய கள்ளக்காதல் ஜோடிகளான கிருஷ்ணகோபால் தாசும், அவரது மாமியாரான ஷிபாலி தாசும் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டனர்.
இதனால் மனம் நொந்து போன பிரியங்கா தாஸ் தனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெற்ற தாயே மகளின் வாழ்க்கைக்கு வில்லியாக மாறியிருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்