Mosque : மசூதிபோல காட்சியளித்த பேருந்து நிலையம்.. மிரட்டல் விடுத்த பாஜக எம்பி.. அகற்றப்பட்ட குவிமாடம்..!
பார்ப்பதற்கு மசூதி போல காட்சி அளிப்பதாக கூறி பாஜக எம்பி விடுத்த மிரட்டலால் தற்போது அதன் தோற்றமே மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கிடையே, மைசூரில் உள்ள ஒரு பேருந்து நிலையம் பேசுபொருளாக மாறியது. அது, பார்ப்பதற்கு மசூதி போல காட்சி அளிப்பதாக கூறி பாஜக எம்பி விடுத்த மிரட்டலால் தற்போது அதன் தோற்றமே மாற்றப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தின் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பேருந்து நிலையம், கேரள எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 766-இல் கொள்ளேகல பகுதியில் அமைந்துள்ளது. முன்னதாக, அந்த பேருந்து நிலையத்தின் மேற்பகுதியில் தங்க நிறத்தில் மூன்று குவிமாடங்கள் இருந்தன. ஆனால், தற்போது அதற்கு ஒரு குவிமாடமே உள்ளது. அதுவும், சிவப்பு நிறத்தில் உள்ளது.
மசூதி போல காட்சியளித்த அந்த மூசூதியை இடிக்க பொறியாளர்களுக்கு கர்நாடக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த பேருந்து நிலையத்தை பாஜக எம்எல்ஏதான் கட்டி இருக்கிறார்.
மசூதி குறித்து பேசியிருந்த பிரதாப் சிம்ஹா, "சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறேன். பஸ் ஸ்டாண்டில் மூன்று குவிமாடங்கள் உள்ளன. நடுவில் பெரியது மற்றும் அதன் அருகில் இரண்டு சிறியது. அது மசூதிதான். மைசூரின் பெரும்பாலான பகுதிகளில் இத்தகைய வடிவமைப்பில் கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
மூன்று நான்கு நாட்களில் கட்டிடத்தை இடிக்க பொறியாளர்களிடம் கூறியுள்ளேன். இல்லை என்றால் ஜேசிபியை எடுத்து இடித்து விடுவேன்" என குறிப்பிட்டிருந்தார். இவரது கருத்து, பிளவை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி எதிர்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பின விமர்சித்திருந்தனர். பேருந்து நிறுத்தத்தை கட்டிய உள்ளூர் பாஜக எம்எல்ஏ ராம் தாஸ், முதலில் தனது கட்சி எம்பியின் கருத்துக்களை நிராகரித்திருந்தார். பேருந்து நிழற்குடை வடிவமைப்பு மைசூர் அரண்மனை பாணியில் கட்டப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
பின்னர், உள்ளூர் மக்களுக்கு மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ள எம்எல்ஏ தாஸ், "மைசூரின் பாரம்பரியத்தை மனதில் கொண்டு பேருந்து நிறுத்தத்தை வடிவமைத்தேன்.
கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அதனால்தான் இரண்டு குவிமாடங்களை அகற்றுகிறேன். யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை, பேருந்து நிழற்குடையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த செய்தியை பிரதாப் சிம்ஹா பகிர்ந்துள்ளார். மேலும், தனது கவலைகளை நிவர்த்தி செய்த பாஜக எம்எல்ஏ மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார்.