டெல்லி கார் வெடிப்பு: குற்றவாளிகளை வேட்டையாட அதிரடி உத்தரவு! அமித் ஷாவின் ஆவேச பேச்சு
டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு.

டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடைய ஒவ்வொரு குற்றவாளிகளையும் வேட்டையாடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக டெல்லியில் உயரதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதில், டெல்லியில் நடந்த சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு குற்றவாளிகளை வேட்டையாடுங்கள் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். கார் வெடிப்பில் தொடர்புடைய ஒவ்வொருவரும் எங்களது கோபத்தை எதிர்கொள்வார்கள் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.
கார் வெடிப்பு - அறிக்கை சமர்பிப்பு
மேலும், டெல்லி கார் குண்டு தாக்குதல் தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை உள்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணை அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி காவல்துறை சமர்பித்தது.
முன்னதாக, டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இதற்குக் காரணமான ஒருவர்கூட தப்ப முடியாது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்திருந்தார்.
டெல்லியில் நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் டெல்லி, எல்ஜேஎன்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே, திங்கட்கிழமை மாலை 6.52 மணி அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.






















