மனநோயை குணப்படுத்த இரும்புச் சங்கிலி: தெலங்கானா கிராமத்தில் கொடூரம்
மனநோய் இன்னும் வெளிப்படையாகச் சொல்ல மக்கள் அச்சப்படும், அவமானப்படும் நோயாகவே இருக்கிறது.
மனநோய் இன்னும் வெளிப்படையாகச் சொல்ல மக்கள் அச்சப்படும், அவமானப்படும் நோயாகவே இருக்கிறது.
அதனாலேயே ஆரம்ப காலங்களை தவறுவிட்டுவிட்டு முத்திய நிலையில் நிறைய பேர் சிகிச்சைக்கு வந்து வாழ்நாள் பூராவும் மருந்து உட்கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். இல்லை சிலரை உறவுகளே லாரிகளில் ஏற்றி மற்ற மாநிலங்களுக்கு அனுப்பிவைத்து விடுகின்றனர். இன்னும் சிலர் ஏதாவது மடத்தில் மோசமான சூழ்நிலையில் தங்கவைக்கப்படுகின்றனர்.
மனநோய் என்பது "ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, மனநிலை அல்லது நடத்தையை பாதிக்கும் நிலைமைகளை குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல மனச்சோர்வு, இருமுனையக் கோளாறு, பதட்டம் அல்லது ஸ்கீஸோஃப்ரீனியா ஆகியவையும் இதற்குள் அடங்கும். ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டுவிட்டால் அது ஸ்கீஸோஃப்ரீனியா எனப்படும் மனச்சிதைவு நோய்க்கே கொண்டுவந்துவிடும்.
இப்படித் தான் தெலங்கானா மாநிலத்தில் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை இருக்கிறது. தெலங்கானா மாநிலம் முத்தியும்பேட்டாவில் ஒரு மோசமான நடவடிக்கையை பின்பற்றுகின்றனர். அங்கு கொண்டகாட்டு ஆஞ்சநேய சுவாமி கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை 20 முதல் 40 நாட்களுக்கு சங்கிலியில் கட்டி வைக்கின்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை என்று எதுவும் அளிக்கப்படுவதில்லை. கோயிலைச் சுற்றி ஆங்காங்கு அவர்களை கட்டி வைத்துவிடுகின்றனர். இதனால் அங்கு கட்டிவைக்கப்படுபவர்களின் நிலைமை இன்னும் தான் மோசமாகிறது. சிலர் இறந்தும் கூட போகின்றனர். சிலர் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் சங்கிலியில் இருந்து விடுவிக்கப்படும் போது அங்கேயே பிச்சைக்காரர்களாக வலம்வரத் தொடங்குகின்றனர்.
இதில் என்னக் கொடுமை என்றால் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் இந்த கோயிலில் கொண்டு வந்து கட்டி வைக்கின்றனர்.
இது குறித்து உள்ளூர் இளைஞர் நவீன் கூறுகையில், அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள ராஜுரா கிராமத்தில் இருந்து ஒரு இளைஞர் அழைஹ்து வரப்பட்டார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவரது கால்களில் சங்கிலியைக் கட்டிய உறவினர்கள் அவரை இங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர் என்றார்.
இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் திருப்பதி ரெட்டி கூறுகையில், இங்கே கோயிலில் இதுபோன்று இரும்புச் சங்கிலியில் கட்டிவைத்துச் செல்வதால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு வந்துவிடுபவர்களுக்கு உறவுகள் யாரும் ஆதரவு தருவதில்லை என்பதால் கிராம மக்களே இவர்களை ஆதரவற்றவர்களாகக் கருதி உதவி செய்கின்றனர் என்று கூறினார்.
இந்நிலையில் தான் இந்த மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சியர் ஒருவர் வந்தார். சுமிதா தவ்ரா என்ற அந்த ஆட்சியர் மனநோய்க்கு மருந்து மாத்திரைகள் தான் குணமளிக்கும் இதுபோல் சங்கிலியில் கட்டிவைப்பதால் நோய் முற்ற மட்டுமே செய்யும் என்று கூறினார். மேலும் அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் மனநல மருத்துவமனைகளுக்கு மாற்றினார். ஆனாலும் இன்றும் அவ்வப்போது யாரேனும் ஒரு சிலர் கமுக்கமாக நோயாளிகளை கட்டிவைத்துச் செல்வது தொடர்கிறது.
ஏர்வாடி சம்பவம் நினைவு இருக்கிறதா?
கடந்த 2001, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஏர்வாடி மனநலக் காப்ப கத்தில் நடந்த கொடூர தீவிபத்தை மனசாட்சி உள்ள எவராலும் மறக்கவே முடியாது. தன்னிலை அறியாமல், திக்கற்றுத் தவித்த மனநோயாளிகள் 28 பேரும் தீயின் கொடிய நாவால் தீண்டப்பட்டு, தப்பி ஓடக்கூட முடியாமல் துள்ளத்துடிக்க கரிக்கட்டையான சோகம் அது. சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அப்படித் தங்கவைக்கப்படுவதில்லை.