Corona Mask Mandatory : மீண்டும் மாஸ்க்.. புதுச்சேரியில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரியும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடற்கரை, சந்தை, திரையரங்கம் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளிகள், கல்லூரிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாயிரத்தைக் கடந்த கொரோனா
கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மீண்டும் உச்சம் பெற்று வருகிறது. நாடு முழுவதும் தினசரி கொரோனா எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஏப்.07) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று (ஏப்.06) ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிரித்து வந்த நிலையில், தற்போது புதிய உச்சமாக ஆறாயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 28,303 ஆக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் தொடங்கி கொரோனா தொற்றானது உலக நாடுகளை நிலைகுலைய வைத்து வந்த நிலையில், கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எண்ணற்ற உயிரிழப்புகள், பாதிப்புகளைக் கடந்து சென்ற ஆண்டு மத்தியில் தொடங்கி கொரோனா தொற்று பாதிப்புகள் சற்றே ஓயத் தொடங்கின.
சுகாதார ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் கொரோனா நாடுகள் கடந்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் புதிய உச்சமாக தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும் படிக்க: TN Corona Spike: தமிழ்நாட்டில் வேகமாக பரவும் XBB வகை கொரோனா.. பாதிப்புகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி? முழு விவரம் இதோ..