Mangalyaan: செவ்வாய்க்கோளை சுற்றிவந்த இந்தியாவின் பெருமிதம் மங்கள்யான் செயலிழப்பு; இஸ்ரோ சொன்ன அதிர்ச்சி தகவல்..
செவ்வாய் கோளை 8 ஆண்டுகள் சுற்றி வந்த மங்கள்யான் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மங்கள்யான்
கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மங்கள்யான் விண்கலம் (ஆர்பிட்டர்) பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்து செவ்வாய் கோளின் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி ஆராய்ச்சிக்கு உதவியது.
வெறும் ஒரு சினிமா படம் தயாரிப்பதற்கான செலவான ரூ. 450 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டது இத்திட்டமாகும். பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் அனுப்பப்பட்ட உலகின் நான்காவது விண்வெளி நிறுவனமாக இஸ்ரோ சாதனை படைத்தது. மேலும் முதல் முயற்சியிலையே செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடு என்னும் சாதனை படைத்தது.
செயலிழந்தது:
இதையடுத்து, 8 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக வெளிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட மங்கள்யான் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது, “மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. அதன் பேட்டரியும் செயலிழந்துவிட்டது. அந்த விண்கலத்துடனான தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, அதை செயல்பட வைக்க முடியாது என அறிவித்துள்ளது.
Mars Orbiter craft non-recoverable, Mangalyaan mission over, confirms ISRO
— Press Trust of India (@PTI_News) October 3, 2022
காரணம்:
கிரகணம் காரணமாக அந்த விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. சமீபத்தில் ஏழரை மணிநேரம் நீடித்த கிரகணங்கள் உட்பட ஒன்றுக்கு ஒன்று என நிறைய நிகழ்ந்ததாக கூறப்படுகிறது
செயற்கைக்கோள் பேட்டரி சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே கிரகணத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட கிரகணம் ஏற்பட்டதால், சூரிய ஒளி கிடைக்காததால் பேட்டரி செயல்படும் திறன் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மங்கள்யான் -2
வரும் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு பயணத்தைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஒரு ஆர்பிட்டராகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்து, 2021 ம் ஆண்டு, பதவிக் காலத்தின்போது முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்ததாவது, இரண்டாவது செவ்வாய்ப் பயணம் இன்னும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது, மங்கள்யான் -2 திட்டம் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
”அறிவியல் சாதனை”
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையைச் சுற்றி ஆறு மாத காலப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட மங்கள்யான், கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்தது, இந்தியாவின் மிகப் பெரிய சாதனை மற்றும் பெருமிதமாகும்.
இந்நிலையில், மங்கள்யான திட்டமானது வரலாற்றில் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சாதனையாக கருதப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Also Read: Jupiter Closest to Earth: 59 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு நெருக்கமாக வந்த வியாழன் கோள்