Mallikarjun Kharge: காங்கிரஸ் தலைவரானார் கார்கே...!
Congress New President: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் கார்கே(Mallikarjun Kharge) வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(Mallikarjun Kharge) வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவான வாக்குகளில் 7897 வாக்குகள் கார்கேவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1072 வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 416 வாக்குகள் செல்லாதவை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு, நேரு குடும்பத்தை அல்லாதவர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சசி தரூர் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் எனவே அந்த மாநிலத்தில் உள்ள வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கார்கே வெற்றிபெற்றதாக ராகுல் காந்தி கர்நாடகாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதனை தொடர்ந்து, ஒரு மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
கார்கேவின் அரசியல் வாழ்க்கை
கார்கே 1969 இல் தனது சொந்த ஊரான குல்பர்கா நகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து மாநில அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். 1972 இல் அவர் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் அரசியலில் நுழைந்தார். அப்போது முதல் வெற்றியை பதிவு செய்த அவர் அதற்கு பின்னரும் தொடர்ந்து எட்டு முறை வெற்றிபெற்று சாதனை படைத்தார். 1976ஆம் ஆண்டு தேவராஜ் அரசில் முதல் முறையாக அமைச்சரானார்.
1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியுடனான மோதலுக்குப் பிறகு தேவராஜ் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸை (யு) என்ற கட்சியை தொடங்கினார். தேவராஜ் மீதான பற்றால் அவரின் கட்சியில் கார்கே இணைந்தாலும், 1980 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
1980இல் குண்டுராவ் அமைச்சரவையிலும், 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவையிலும் 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார். 1996-99ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் மற்றும் 2008-09, மற்றும் 2005-08 முதல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
தேசிய அரசியலுக்கு செல்வதற்கு முன்பு 2009 இல், அவர் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர்த்துறை அமைச்சராகவும், பின்னர் ரயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2014இல் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் அவர்களின் பலம் 44ஆக குறைந்தது. அப்போதுதான், கார்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குல்பர்கா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நாங்கள் மக்களவையில் 44 பேராக இருக்கலாம், ஆனால் நூறு கௌரவர்களால் பாண்டவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்" என்றார்.
2019 ஆம் ஆண்டில், தேர்தல் வாழ்க்கையில் முதல்முறையாக, கார்கே தோல்வியை சந்தித்தார். இதையடுத்து, கட்சி அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது. மேலும், பிப்ரவரி 2021 இல் அவரை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் நியமித்தது.