Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Baba Siddique Death: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Maharashtra NCP: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர், பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் சூழலில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக்:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாபா சித்திக் மார்பில் இரண்டு முறை சுடப்பட்டதால், அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 9.9 எம்எம் பிஸ்டல் மீட்கப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது, மும்பை மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
மும்பையின் பாந்த்ரா கிழக்கில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அஜித் பவார் தலைமையிலான NCP ஐச் சேர்ந்த பாபா சித்திக் மீது சனிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தினார். நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகனான எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு வெளியே வைத்து, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாபா சித்திக்கிற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அவருக்கான போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பைகுல்லாவைச் சேர்ந்த சச்சின் குர்மி மற்றும் சித்திக் உட்பட என்சிபியின் இரண்டு தலைவர்கள் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டு இருப்பது மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”முதலமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை”
சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது குற்றவாளியை தீவிரமாக தேட் வருவதாகவும்” தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாபா சித்திக்கில் உயிரிழப்பு துருதிருஷ்டவசமானது எனவும் வேதனை தெரிவித்தார்.
அதேநேரம், “மும்பையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அரசு தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றால், இந்த அரசு சாமானியர்களை எப்படி பாதுகாக்கும்? எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால் உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சராக தொடரும் உரிமை ஏக்நாத் ஷிண்டேவுக்கு இல்லை. மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு பயல் இல்லாமல் போய்விட்டது” என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் கூட்டணியை சேர்ந்த தலைவர் ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.